Published : 17 Jun 2020 04:31 PM
Last Updated : 17 Jun 2020 04:31 PM
படித்து முடித்துவிட்டு வேலைக்காக மாதக்கணக்கில் காத்திருக்கும் இளைஞர்கள் ஏராளம். அவர்களுக்கு மத்தியில், படித்து முடிக்கும் முன்பே அதிலும் தனது கல்விமுறை சார்ந்த வேலையைப் பகுதி நேரமாகச் செய்து மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பி.காம். மாணவர் சுந்தர்.
நாகர்கோவில் செட்டிக்குளத்தில் இருக்கிறது சுந்தரின் அலுவலகம். அதன் மேஜையைச் சுற்றி கணக்குப் பதிவியல் குறிப்புகள் இருக்கின்றன. நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் பி.காம்., மூன்றாமாண்டு படிக்கும் சுந்தர், பத்துக் கடைகளுக்குக் கணக்கு எழுதிக்கொடுக்கிறார்.
கரோனா பொதுமுடக்கத்தால் நாடு முழுவதும் பல ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இதில் பலர் மாற்றுத்தொழில்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இப்படியான பொருளாதாரச் சீர்கேடுகளுக்கு மத்தியில், 20 வயதே ஆன சுந்தர், அதிலும் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும்போதே சொந்த அலுவலகம் போட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பேசிய சுந்தர், “மக்களிடம் இன்னமும் தொழிற்கல்வி மோகம்தான் அதிகமாக இருக்கிறது. முன்பெல்லாம் ஊருக்கு ஒரு பொறியாளர் இருந்தார். இப்போது அது குடும்பத்துக்கு ஒருவராக விரிந்திருக்கிறது.
கலைக் கல்லூரிகளில் பி.காம். எப்போதும் வேலைவாய்ப்பு இருக்கும் துறை. எல்லா மாணவர்களையும் போலத்தான் நானும் கல்லூரிக்குப் போனேன். ஒருநாள் எனது வீட்டில் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘பி.காம். படிச்சுட்டு எப்படியும் கணக்கர் வேலைக்குத்தான் போகப்போற... ஏட்டுக்கல்வி ஒருபக்கம் இருந்தாலும் அனுபவக் கல்வியும் தேவைப்பா’ன்னு சொன்னாங்க.
அந்த அனுபவத்தைப் பெறுவதற்காக, வழக்கறிஞரான என்னோட சித்தப்பாவோட ஆபீஸில் வேலைக்குச் சேர்த்து விட்டாங்க. சித்தப்பா வரி, கணக்குப் பதிவியலும் சேர்த்துப் பார்ப்பாங்க. கல்லூரி முதல் வருஷத்துல இருந்து, முழுசா ரெண்டு வருஷம் தொழில் கத்துகிட்டேன்.
மூன்றாம் வருஷப் படிப்பைத் தொடங்கும் போதே தனி அலுவலகம் போட்டுட்டேன். என்னோட சித்தப்பாவும் சில கடைகளில் என்னைப் பரிந்துரைச்சாங்க. முதல்ல நாலஞ்சு கடைகளுக்கு கணக்கு எழுத ஆரம்பிச்சேன். இப்போ பத்துக் கடைகளுக்குக் கணக்கு எழுதுறேன். ஒரு கடைக்கு ஆயிரம் ரூபாய் வீதம், பத்துக் கடைக்கு பத்தாயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டுருக்காங்க. அதனால பத்துக் கடைகளுக்கும் பதறாம கணக்கு எழுத நேரம் கிடைக்குது. கல்லூரி விடுமுறை நாட்களில் எதிர்கால வாழ்க்கைக்கான விதையைப் போட்டதின் பலனை இந்தக் கரோனா காலத்தில் உணர்ந்தேன். எங்க குடும்பப் பொருளாதாரத்துக்கும் இந்த நேரத்தில் என்னோட வருமானம் உதவியா இருக்கு” என்று தன்னம்பிக்கையுடன் கூறினார் சுந்தர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT