Published : 17 Jun 2020 10:29 AM
Last Updated : 17 Jun 2020 10:29 AM
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு நீட் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்பினை நேற்று (ஜூன் 16) தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூன் 17) வெளியிட்ட செய்தி வெளியீடு:
"நீட் போன்ற போட்டித் தேர்வுகளை மாணவ, மாணவியர் எவ்வித தயக்கமும், தளர்வும் இல்லாமல், உறுதியான எண்ணத்தோடு எதிர்கொள்ளும் வகையில், தமிழக அரசு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தனித்துவம் மிக்க பயிற்சி அளிக்கும் திட்டத்தினை 13.11.2017 அன்று முதல்வர் தொடங்கி வைத்தார். ஒன்றியத்திற்கு ஒரு மையம் வீதம் 412 மையங்களில் இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட் போட்டித் தேர்வுக்கான பயிற்சியை அளித்திடும் வகையில், நீட் தேர்வுக்கான இணையதள கட்டணமில்லா பயிற்சியினை வழங்கிட Amphisoft Technologies (E-box) நிறுவனத்துடன் பள்ளிக்கல்வித் துறை புரிந்துர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இப்பயிற்சியினை பெற இதுவரை 7,420 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
Amphisoft Technologies நிறுவனத்தால் இணையதளம் மூலமாக, ஒவ்வொரு நாளும் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கு தலா 1 மணி நேரம் வீதம், 4 மணி நேர பயிற்சியும், பயிற்சி முடித்தவுடன் அன்றைய தினமே ஒவ்வொரு பாடத்திற்கும் 1 மணி நேரம் வீதம், 4 மணி நேரம் பயிற்சித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன. மேலும், 80 பயிற்சி தேர்வுகள், 80 வளரறி தேர்வுகள், 5 அலகுத் தேர்வுகள், 12 திருப்புதல் தேர்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT