Published : 15 Jun 2020 07:27 PM
Last Updated : 15 Jun 2020 07:27 PM
நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. குழு உறுப்பினர்களாக, உயர் கல்வி, பள்ளிக் கல்வி, சுகாதாரத்துறைச் செயலர்கள் நியமிக்கப்பட்டனர். இக்குழு பல்வேறு தரப்பிடம் ஆலோசனை பெற்றது.
இதற்கிடையே குழுவின் அறிக்கை கடந்த 9-ம் தேதி முதல்வர் பழனிசாமியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையில், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கலாம் எனப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இதை ஏற்ற தமிழக முதல்வர் தலைமையிலான அமைச்சரவைக் குழு, 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கரோனா பரவலைத் தடுக்க அரசு மேற்கொள்ளவேண்டிய கூடுதல் நடவடிக்கைகள், கள நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
— AIADMK (@AIADMKOfficial) June 15, 2020
கடந்த 20 ஆண்டுகளாக, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கனவாகவே உள்ளது. நீட் தேர்வுக்குப் பின்னர், 2017-18, 2018-19, 2019-20 ஆகிய கல்வி ஆண்டுகளில், அரசுப் பள்ளிகளில் இருந்து, மருத்துவக் கல்விக்கு 10 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சென்றனர்.
இந்தச் சூழலில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான தமிழக அமைச்சரவையின் ஒப்புதல் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT