Published : 15 Jun 2020 01:18 PM
Last Updated : 15 Jun 2020 01:18 PM
கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் கோவை அரசு கலைக் கல்லூரி 34-வது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகள் அளவில் மாநிலத்தில் 2-ம் இடத்தைப் பெற்றுள்ளது.
மத்திய அரசின் மனித வளத்துறை, 2020-ம் ஆண்டுக்கான கல்வி நிறுவனங்களைத் தரவரிசைப் படுத்துவதற்காக, நாடு முழுவதும் உள்ள 1,667 கல்வி நிலையங்களை ஆய்வு செய்தது.
கற்றல்- கற்பித்தல், உள் கட்டமைப்பு, ஆராய்ச்சி, சிறந்த நடைமுறைகள், அக மற்றும் புறக் கல்விசார் முன்னெடுப்புகள், மாணவர்களின் தேர்ச்சி விகிதம், வேலைவாய்ப்புகள், கல்வி நிறுவனம் குறித்த சமூக மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களை முன்வைத்து ஆராய்ந்தது. அதன் அடிப்படையில் முதல் 100 இடங்கள், 101 முதல் 150 இடங்கள், 151 முதல் 200 இடங்கள் என மூன்று பிரிவுகளில் கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்து நிபுணர் குழு, அறிக்கை சமர்ப்பித்தது. அதைத்தொடர்ந்து மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், வெளியிட்ட தேசிய தரவரிசைப் பட்டியலில் கோவை அரசு கலைக் கல்லூரி முதல் 100 இடங்களுக்கான கல்வி நிறுவனங்களின் பட்டியலில் 34-வது இடத்தைப் பிடித்துள்ளது. அரசுக் கல்லூரிகள் அளவில் தமிழகத்தில் 2-வது இடத்தைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் க.சித்ரா கூறும்போது, ''தேசிய அளவிலான தர வரிசைப் பட்டியலில் 57.81 புள்ளிகள் பெற்று கோவை அரசு கல்லூரி 34-வது இடத்தையும், அரசுக் கல்லூரிகள் அளவில் மாநிலத்தில் 2-வது இடத்தையும் பிடித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இது இக்கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்குப் பெருமை அளிப்பதாகும். இக்கல்லூரி பெரும்பாலான முதல் தலைமுறை பட்டதாரிகளைக் கொண்டு செயல்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் படிக்கின்றனர்.
ஒன்றரை நூற்றாண்டுகளைக் கடந்து செயல்பட்டு வரும் இக்கல்லூரி, தேசிய தர நிர்ணயக் குழுவின் (நாக்) 'ஏ' கிரேடு தகுதியும், தன்னாட்சி அந்தஸ்தும் பெற்றுள்ளது. கல்லூரியின் வளர்ச்சிக்கு பாடுபடும் ஆசிரியர் குழுவினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் ரா.தாமோதரன் கூறும்போது, ''கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழகக் கல்லூரிகள் இடம் பெற்றிருப்பது பெருமைக்குரியது. அரசுக் கல்லூரிகளைப் பொறுத்தவரை தமிழகத்தில் சென்னை மாநிலக் கல்லூரி முதலிடத்தையும், கோவை அரசு கலைக் கல்லூரி இரண்டாமிடத்தையும், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளது பாராட்டத்தக்கது.
101-150 வரையிலான தரவரிசையில் சென்னை பாரதி மகளிர் கல்லூரி, வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கல்லூரி, மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரி, கும்பகோணம், உடுமலை, சேலம் அரசுக் கல்லூரிகளும், 151-200 வரையிலான தரவரிசையில் திருச்சி பெரியார் ஈவேரா கல்லூரி, தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி, வேலூர் முத்துரங்கம் கல்லூரி, திருவண்ணாமலை அரசுக் கல்லூரி ஆகியவை இடம் பெற்றுள்ளன. அரசுக் கல்லூரிகள் தேசிய தர வரிசையில் இடம் பிடித்து, தமிழக அரசுக்கும், உயர் கல்வித்துறைக்கும் பெருமைத் தேடித் தந்துள்ளன. வரும் ஆண்டுகளில் இப்பட்டியலில் மேலும் பல அரசுக் கல்லூரிகள் இடம்பெறப் பாடுபடுவோம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT