Published : 14 Jun 2020 06:19 AM
Last Updated : 14 Jun 2020 06:19 AM
கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. அதன் ஒருபகுதியாக, பள்ளி, கல்லூரிகள் கால வரையின்றி மூடப்பட்டுள்ளன.
இதனைக் கருத்தில் கொண்டு, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஜூம் உள்ளிட்ட பிரத்யேக செல்போன் செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆன்லைன் வகுப்புகள் வாயிலாக பல்வேறு பள்ளிகள், மாணவர்களுக்கான பாடத் திட்டங்களை வேகமாக முடித்து வருகின்றன. மேலும், தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டு வருகின்றன.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் முடியும் வரை ஆன்லைன் முறையிலேயே பாடங்களை எடுக்க பள்ளிகளை அறிவுறுத்துவது குறித்து மத்திய அரசும் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த வசதியை பெற வேண்டுமெனில், மாணவர்களிடம் நவீன செல்போன்கள் (ஸ்மார்ட்போன்கள்) இருக்க வேண்டியது அவசியம்.
இந்நிலையில், ‘ஸ்மைல் பவுண்டேஷன்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் நாடு முழுவதும் நடத்திய ஆய்வில், 56 சதவீத பள்ளி மாணவர்களிடம் ஸ்மார்ட்போன்கள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதேபோல், 31.01 சதவீத பள்ளி மாணவர்களின் வீடுகளில் தொலைக்காட்சி வசதியும் இல்லை. எனவே, இந்த மாணவர்களால் எந்த முறையிலும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாது என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, குஜராத், தமிழகம், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் உட்பட 23 மாநிலங்களில் சுமார் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக ‘ஸ்மைல் பவுண்டேஷன்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT