Published : 13 Jun 2020 02:30 PM
Last Updated : 13 Jun 2020 02:30 PM
ஆன்லைன் வகுப்புகளுக்குக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரோனா ஊரடங்கை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு மார்ச் 16 முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏராளமான கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதற்காகப் பெற்றோர்களிடம் கட்டாயப்படுத்திக் கட்டண வசூல் செய்வதாகவும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இது தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
’’அரசு வெளியிட்டுள்ள அரசாணை, விதிமுறைகளை மீறிக் கட்டணம் வசூலித்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 2019- 20 ஆம் கல்வி ஆண்டுக்கான நிலுவைக் கட்டணம், 2020- 21 ஆம் கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்துமாறு பெற்றோர்களை நிர்பந்திக்கக் கூடாது என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது.
கல்விக் கட்டணம் மட்டுமல்ல இணையவழி வகுப்புகளுக்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. அவற்றை மீறிக் கட்டணம் வசூல் செய்வது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்’’.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT