Published : 13 Jun 2020 09:22 AM
Last Updated : 13 Jun 2020 09:22 AM
தமிழகத்தில் 5-ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கான ஆன்லைனில் பாடம் நடத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என, மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, திருநாவுக்கரசர் இன்று (ஜூன் 13) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா பாதிப்பாலும் பிரச்சினையாலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள இச்சூழ்நிலையில் ஆன்லைன் மூலம் சிறு குழந்தைகளுக்கு பாடம் நடத்துவது சரியல்ல, அவசியமும் இல்லை என பொதுவாக பலராலும் கருதப்படுகிறது. இது சுமார் இரண்டரை மணி நேரம் வீட்டில் உள்ள குழந்தைகளின் கண்களுக்கு கேட்டினையும், மனதுக்கு உளைச்சலையும் தரக் கூடியது. குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் இது சங்கடத்தையும், சிரமத்தையும் மன உளைச்சலையும் தரக் கூடியது.
எல்லா வீடுகளிலும் இணையதள வசதியோ, கணினியோ, மடி கணினியோ, தொடு திரை கைப்பேசியோ இருப்பதில்லை. மேற்கண்ட வசதிகள் உள்ள குடும்பங்களில் பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளுக்கு சிறிது நேரம் ஒதுக்கி அவர்களுக்கு வசதியான நேரத்தில் குழந்தைகள் விரும்பும் வகையில் பாடங்களைச் சொல்லித்தர இயலும்.
சரியான கல்வியாளர்களின் ஆய்வுக்குப் பிறகே கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் குழந்தைகளுக்கான ஆன்லைன் பாட முறை கைவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகள் போக தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் சொல்லித் தருவதை காரணம் காட்டி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை பெற்றோர்களின் சிரமமான இச்சூழ்நிலையில் கேட்டு வற்புறுத்துவதாக பரவலாக சொல்லப்படுகிறது.
எனவே 5-ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கான ஆன்லைனில் பாடம் நடத்தும் திட்டத்தை மற்ற சில மாநிலங்களைப் போல நிறுத்திட வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். இது குறித்து முதல்வரும், கல்வி அமைச்சரும், கல்வித் துறை அதிகாரிகளும், கல்வியாளர்கள், நிபுணர்கள், மனோதத்துவ விற்பன்னர்கள் ஆகியோரை அழைத்து, அவர்களின் கருத்தரிந்து மேற்கண்ட எனது வேண்டுகோளை அரசு பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT