Published : 12 Jun 2020 07:39 AM
Last Updated : 12 Jun 2020 07:39 AM

பள்ளிகளை திறப்பது தொடர்பாக என்சிஇஆர்டி ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு- சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பரிந்துரை

சென்னை

ஊரடங்கு காரணமாக புதிய கல்வி ஆண்டில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்க தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு (என்சிஇஆர்டி) மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சில நாட்களுக்குமுன் என்சிஇஆர்டி சமர்ப்பித்தது. அதில், கரோனா தாக்கம் தணிந்த பிறகு பள்ளிகள் திறப்பை 6 கட்டங்களாக மேற்கொள்ள வேண்டும்.

சுழற்சி முறையில்..

முதலில் மேல்நிலை வகுப்புகளைத் தொடங்கி, சிறிய கால இடைவெளிகளில் உயர்நிலை, நடுநிலை, இடைநிலை, தொடக்க மற்றும் மழலையர் வகுப்பை ஆரம்பிக்க வேண்டும்.

சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த வேண்டும். தனி நபர் இடைவெளியைப் பின்பற்ற திறந்தவெளியில் வகுப்புகளை நடத்துவதுடன், ஒவ்வொரு பாடவேளை முடிந்ததும் 10 நிமிடம் இடைவேளை தரவேண்டும்.

50 சதவீத மாணவர்கள்

வகுப்பறையில் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே இருப்பதுடன், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் திறந்து வைக்க வேண்டும்.

ஏசி பயன்படுத்தக் கூடாது. மாணவர்கள் தினமும் ஒரே நாற்காலியில் அமர்வதுடன், வகுப் பறைகளை கிருமிநாசினி கொண்டு தினமும் சுத்தம் செய்யவேண்டும்.

தினமும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும். கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், உணவுப் பொருட்களை பகிர்தல் கூடாது, விடுதிகளில் 6 அடி இடைவெளியில் படுக்கைகள் இருக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x