Published : 09 Jun 2020 06:55 PM
Last Updated : 09 Jun 2020 06:55 PM
இறுதியாண்டு தவிர்த்து அனைத்து மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை புதுவைப் பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.
நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து சீராகாத நிலையில் புதுச்சேரியில் பொறியியல், மருத்துவம், சட்டம், நர்சிங் கல்லூரிகளுக்கான தேர்வை ஜூலையில் நடத்த புதுவைப் பல்கலைக்கழகம் முடிவு செய்திருந்தது. கரோனா உச்சத்தில் இருக்கும் சூழலில் தேர்வை நடத்த மாணவர்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பி போராட்டங்கள் நடந்தன.
இதையடுத்து முதல்வர் நாராயணசாமி புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீந்த் சிங்கைத் தொடர்பு கொண்டு பேசினார். மத்திய அரசு தேர்வு தொடர்பாக எவ்வித முடிவும் எடுத்து அறிவிப்பை வெளியிடவில்லை. அதனால் தேர்வு அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரினார்.
இந்நிலையில் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் லாசர் பிறப்பித்துள்ள உத்தரவில், "புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இறுதியாண்டு தவிர்த்து இதர செமஸ்டர்களில் தேர்வு இல்லை. உள்மதிப்பீடு மூலம் மதிப்பெண்கள் தரப்படும். இந்த மதிப்பீடு முறை அந்தந்த செமஸ்டரில் உள்ள படிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.
ஏற்கெனவே தோல்வியடைந்து தேர்வு எழுத வேண்டிய அரியர் பாடங்களுக்கு இது பொருந்தாது. அரியர் தேர்வுகளுக்கான அட்டவணை கல்லூரி தொடங்கப்பட்ட காலத்தில் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT