Published : 09 Jun 2020 01:28 PM
Last Updated : 09 Jun 2020 01:28 PM
ஆன்லைன் வகுப்புகளால் படைப்பாற்றலை அடுத்தவர்களுக்குக் கடத்த முடியாது என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய இஸ்ரோ முன்னாள் தலைவரும் புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழுவின் தலைவருமான கே.கஸ்தூரிரங்கன், ''அடிப்படையில் குழந்தைகளுடன் நேரடி மற்றும் மன ரீதியான தொடர்பு என்பது மிகவும் முக்கியமானது. விளையாட்டு, படைப்பாற்றல் மற்றும் சில முக்கியத் திறன்களை, என்றுமே ஆன்லைன் கற்றல் மூலம் கடத்த முடியாது. முகத்துக்கு முன்பான தொடுதல், யோசனைகளை, எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளுதல் ஆகியவை மரபுவழியில் மட்டுமே சாத்தியம்.
குழந்தைகளுக்கு 8 வயது வரை மூளை வளர்ச்சி தொடர்ச்சியான செயல்பாடாக இருக்கும். முழுமையான உரையாடல்களுடன் அவர்களின் மூளையை முறையாக நீங்கள் தூண்டிவிடாத பட்சத்தில், குழந்தைகளின் தலைசிறந்த செயல்திறனைப் பெறும் வாய்ப்பை இழப்பீர்கள்.
இதுபோன்ற விவகாரங்களை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும். உயர் கல்வியில் ஆன்லைன் வகுப்புகளைக் கற்பது அந்த நேரத்தின் தீர்வாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளின் ஆரம்பக்கட்டக் கல்வியில் இது சிறப்பானதாக இருக்காது.
குழந்தைகளுக்கான ஆன்லைன் கல்வி முறை உள்ளிட்ட அனைத்து முறைமைகளையும் அறிவியல்பூர்வமாக ஆராய வேண்டியது அவசியம். ஆன்லைன் வகுப்புகள் முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியவை'' என்றார் கஸ்தூரிரங்கன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT