Published : 09 Jun 2020 06:44 AM
Last Updated : 09 Jun 2020 06:44 AM
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுடன்(ஹால் டிக்கெட்) 2 முகக் கவசங்கள்நேற்று பள்ளிகளில் வழங்கப்பட்டன. தேர்வுப் பணிகளை கவனிப்பதற்காக அனைத்து ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு வருகை தந்தனர்.
ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுஜுன் 15 முதல் 25-ம் தேதி வரைநடைபெறும் என அறிவிக்கப்பட் டுள்ளது. மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் மற்றும் முகக்கவசம் 8-ம் தேதி வழங்கப்படும் என்றும் தேர்வு மையங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் 8-ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையில், ஆசிரியர்களும், மாணவர்களும் பள்ளிகளுக்கு வருவதற்காக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 69 வழித்தடங்களில் 109 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆசிரியர்களும் மாணவர்களும் முகக் கவசம்அணிந்தபடி நேற்று பள்ளிகளுக்கு வந்தனர். பள்ளியின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த கிருமிநாசினியை பயன்படுத்தி அனைவரும் தங்கள் கைகளை சுத்தப்படுத்திக் கொண்டனர். அவர்களுக்கு காய்ச்சல் ஏதும் இருக்கிறதா என்றுதெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டும், 2 முகக் கவசங்களையும் தலைமை ஆசிரியர்கள் வழங்கினர்.தேர்வு தொடங்கும் நாளன்று இன்னொரு முகக் கவசம் வழங்கப்படும் என்று தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் விடுபட்ட பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுக்கான பணிகளில் அனைத்து ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விடைத்தாள்களில் முகப்புத்தாள் இணைப்பது, தேர்வறைகளில் மாணவர்கள் ஒதுக்கீடு உள்ளிட்ட பொதுத்தேர்வு தொடர்புடைய பல்வேறுபணிகளை அவர்கள் மேற்கொள்வார்கள். 50 சதவீத ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் பணி, எஞ்சிய 50 சதவீத ஆசிரியர்களுக்கு அடுத்த2 நாட்கள் பணி என்ற அடிப்படையில் அவர்கள் 2 நாள் இடைவெளியில் மாறி மாறி வருகை தந்து பள்ளிகளில் தேர்வு பணிகளை கவனிப்பார்கள். பள்ளிக்கு வரும்ஆசிரியர்கள் தெர்மல் ஸ்கேனர்மூலம் தினமும் பரிசோதிக்கப்படு வார்கள் என்று தலைமை ஆசிரி யர்கள் தெரிவித்தனர்.
பேருந்து வசதி பிரச்சினை
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதற்காக நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன. பெரும்பாலான ஆசிரியர்களும் மாணவர்களும் சொந்த வாகனங்களில் பள்ளிக்கு வந்தாலும் கணிசமானோர் மாநகரபோக்குவரத்துக் கழக பேருந்துகளை நம்பியிருந்தனர். அவர்கள் முக்கிய இடங்களுக்கு அரசு பேருந்தில் சென்றுவிட்டனர். இருப்பினும் அங்கிருந்து பள்ளி அமைந்துள்ள இடத்துக்கு செல்ல இணைப்பு பேருந்து வசதி இல்லாததால் பெரிதும் சிரமப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT