Published : 04 Jun 2020 07:40 PM
Last Updated : 04 Jun 2020 07:40 PM
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, மக்களுக்கான மனநல மருத்துவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மனநல மருத்துவர்கள் அரவிந்தன், குருமூர்த்தி, கார்த்திக் தெய்வநாயகம், அபிராமி, ஸ்ரீராம் ஆகியோர் அடங்கிய மக்களுக்கான மனநல மருத்துவர்கள் கூட்டமைப்பு இன்று (ஜூன் 4) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா பெருந்தொற்றுநோய் மற்றும் பொதுமுடக்கம், முழு சமூகத்தின் உடல் நலம் மற்றும் மன நலனில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமூகத்தின் அடித்தட்டு விளிம்புநிலை மக்களின் மீது அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட சில வாரங்களில் மக்களிடையே அதிகரித்து வரும் மனநல நெருக்கடி மற்றும் மனநோய்கள் குறித்து பல ஆய்வறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஏற்கெனவே விளிம்பு நிலையில் இருக்கின்ற மக்களைப் பாதுகாக்க வேண்டியது அவசரத் தேவையாகிறது.
எந்தவொரு நெருக்கடி நிலையிலும், மக்களுக்கு மனநலம் சார்ந்த சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பது அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்யப்பட்ட ஒன்றாகும். இதற்கு கரோனா பெருந்தொற்றும் விதிவிலக்கல்ல.
மேலும், இத்தகைய மனநல நெருக்கடியானது எளிதில் பாதிக்கப்படக் கூடிய நிலையில் இருக்கும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மீது, நாம் பொதுவாக நினைத்துக் கொண்டு இருப்பதை விட மிக அதிகமாகவே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
அதிக ஆபத்தில் இருக்கக்கூடிய வளர் இளம் பருவத்தினர் மற்றும் இன்ன பிற மக்களின் மனநலத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டி ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
யுனிசெஃப் அமைப்பானது தனது அறிக்கையில், குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் ஏற்படக்கூடிய மனநல நெருக்கடிகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது.
மேலும் சரியான வழிமுறைகளின்படி தீர்வு காணப்படாவிட்டால், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்பின் விளைவுகள் கரோனா பெருந்தொற்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியையும் விஞ்சி விடும் என்றும் யுனிசெஃப் எச்சரித்துள்ளது.
வளரிளம் பருவ நிலை மனித வளர்ச்சியின் ஒரு முக்கியமான காலகட்டமாகும். இத்தகைய காலகட்டத்தில் பெருந்தொற்று பற்றி தொடர்ச்சியாக வரும் தகவல்கள், வைரஸ் பரவல் குறித்து பரவலாக ஏற்பட்டுள்ள பயம், நெருக்கமானவர்களுக்கு நோய் ஏற்பட்டு விடுமோ என்கிற பீதி, எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மை, மக்களுடைய குறைந்துள்ள தொடர்பு, போன்ற சூழ்நிலைகளை வளர் இளம் பருவத்தினர் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
அதன் விளைவாக அவர்கள் கோபம், பயம், சோகம், துக்கம் என்று பல்வேறு வகையான உணர்ச்சி சிக்கல்களுக்குஉள்ளாகின்றனர்.
சமீபத்தில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் 'சேவ் த சில்ரன்' என்கிற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் நான்கில் ஒரு குழந்தைக்கு, பதற்றம், சோர்வு, பயம், நோய்வாய்ப்பட்டு விடுவோமோ என்கிற அச்ச உணர்வு, அவநம்பிக்கை மற்றும் தனிமைத்துயர் ஆகிய பிரச்சினைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
வளரிளம் பருவத்தில் ஏற்படக்கூடிய உடல் சார்ந்த, மனம் மற்றும் சமூகம் சார்ந்த மாற்றங்கள், அவர்களது மனநல ஆரோக்கியத்தின் மீது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என பல அறிவியல் ஆராய்ச்சிகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளன.
இந்தியாவில் மூன்றாம் மாதத்தை எட்டியுள்ள நிலையில் பொதுமுடக்கமானது, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஏழைகள், ஆதரவற்றோர், சமூக பொருளாதார ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டோர், மற்றும் சிக்கலான குடும்பச் சூழலில் வாழ்ந்து வரும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் ஆகியோர் கடுமையான தாக்கத்திற்கு ஆளாகி உள்ளனர்.
உடல் ரீதியான, வாய்மொழி மற்றும் உணர்வு ரீதியான வன்முறை, குடும்ப வன்முறை, குடும்ப உறுப்பினர்களிடையே குடிப்பழக்கத்தினால் ஏற்படும் சிக்கல்கள், ஆகியவற்றுடன் நோய் குறித்த பீதி மற்றும் பதற்றமும் இணைந்து, குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு தீவிரமான மனநலச் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி, அதிகரித்து வரும் வறுமை ஆகிய பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்கெனவே இருந்து வரும் மனநலம் சார்ந்த பிரச்சினைகளை இரட்டிப்பாக்கி உள்ளன.
கிராமப்புறத்தைச் சார்ந்த குடும்பங்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள், மேலும் இத்தகைய குடும்பச் சூழ்நிலையில் வாழும் மாணவர்கள் ஆகியோரின் வாழ்க்கை பெருந்தொற்று பொதுமுடக்கத்தால் பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது.
பொதுமுடக்கத்தின் சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கத்தினால் ஏற்படும் மனநலச் சிக்கலை சரியாக அணூகாவிட்டால், தனிநபரின் மனநிலை ஆரோக்கியத்தைப் பாதித்து அவரை நீண்ட கால வளர்ச்சியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், முந்தைய மனநலப் பிரச்சினைகளுடன் இருக்கும் வளர் இளம் பருவத்தினர் கடுமையான மனநல நெருக்கடிக்கு ஆளாகி அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையும் ஏற்படும்.
யுனெஸ்கோ அறிக்கையில் ஏப்ரல் 8, 2020 நிலவரப்படி, உலகில் 188 நாடுகள் கல்வி நிலையங்கள் மூடியுள்ளன. இதனால் கல்வி பெற்று வந்த 90 சதவீதத்திற்கும் மேலான மாணவர்கள் கல்வியின்றி உள்ளனர்.
கரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்ள பல்வேறு நாடுகள் நடைமுறைப்படுத்தி உள்ள தனிமனித இடைவெளி நடவடிக்கைகளால், வளர் இளம் பருவத்தினரின் அன்றாட வாழ்வுமுறை சீர்குலைந்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள கல்வி சீர்குலைவானது, வேகத்திலும், அதன் உலகளாவிய தன்மையிலும் முன் எப்போதும் இல்லாத அளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக யுனெஸ்கோ இயக்குனர் எச்சரித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சீர்குலைவு ஆகியவற்றால் வளரிளம் பருவத்தினர் கல்வியில் கவனம் செலுத்த இயலாத நிலையில் உள்ளனர்.
இத்தகைய சூழலில் தமிழக அரசானது, பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு ஜூன் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என்று அறிவித்துள்ளது. இந்தத் தேர்வினை தமிழகம் முழுவதுமுள்ள 9.44 லட்சம் மாணவர்கள், பெருந்தொற்று சூழலில் எழுத வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அவர்களுள் 4.07 லட்சம் மாணவர்கள் அதாவது 50 சதவீதம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்தவர்களாவர். உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1.45 லட்சம் மாணவர்களும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 91 ஆயிரத்து 918 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 6.45 லட்சம் மாணவர்கள் பெரும்பாலானோர் சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் விளிம்புநிலைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள்.
ஏற்கெனவே உடல், மனம் மற்றும் உணர்வு ரீதியான அழுத்தங்களைச் சந்தித்து இக்கட்டான சூழலில் இருந்துவரும் இந்த மாணவர்கள், பொதுத்தேர்வு என்கிற கல்வி சார்ந்த அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மற்றவர்களைவிடக் கூடுதலான மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மக்களுக்கான மனநல மருத்துவர்களின் கூட்டமைப்பு தமிழக அரசிடம் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.
1. குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் இடையே அதிகரித்து வரும் மனநலச் சிக்கல்கள் மீது உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
2. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே ஏற்படக்கூடிய மனநலச் சிக்கல்களை அடையாளம் கண்டு, ஆராய்ந்து, சிகிச்சை மற்றும் நிவாரணங்கள் வழங்குவதற்கான சேவைகளை உருவாக்க வேண்டும்.
3. நிலவி வரும் பெருந்தொற்று சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் நலன் கருதி 2019- 20 கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வினை ரத்து செய்ய வேண்டும்".
இவ்வாறு மக்களுக்கான மனநல மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT