Published : 04 Jun 2020 11:45 AM
Last Updated : 04 Jun 2020 11:45 AM

கல்விக் கட்டணத்தைக் கட்டாயப்படுத்தும் பள்ளிகள்: தொடரும் புகார்கள்; கோவை ஆட்சியர் எச்சரிக்கை

கல்விக் கட்டணம், நோட்டுப் புத்தகங்களுக்கான கட்டணங்கள் கேட்டு மாணவர்களைக் கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை பாயும் எனக் கோவை மாவட்ட ஆட்சியர் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''கோவை மாவட்டத்தில் உள்ள சில சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்தவும் மற்றும் நோட்டுப் புத்தகங்களுக்கான கட்டணங்கள் செலுத்தக் கோரியும், புத்தகங்களைப் பெற பெற்றோர்களை அழைப்பதாகவும் தொடர்ந்து பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் படி பொதுமுடக்க காலத்தில் கோவிட்-19 வைரஸ் நோய் தொற்றினைக் கட்டுப்படுத்த பள்ளிகள் கல்விக் கட்டணங்கள் செலுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசால் அனைத்து வகைத் தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் 2020- 2021 ஆம் கல்வியாண்டிற்கான கல்விக் கட்டணங்கள், 2019-2020 ஆம் கல்வியாண்டின் நிலுவைக் கட்டணங்கள் மற்றும் அந்நிலுவைக்கான தாமதக் கட்டணங்கள் போன்ற கட்டணங்களைச் செலுத்த வற்புறுத்தவோ கட்டாயப்படுத்துவதோ கூடாது என ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலமாகவும், அனைத்து வகைத் தனியார் பள்ளிகளுக்கும் கல்விக் கட்டணம் செலுத்துவது தொடர்பான அரசாணை விவரம் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து கல்விக் கட்டணங்கள் மற்றும் புத்தகக் கட்டணங்கள் செலுத்த பெற்றோர்களைக் கட்டாயப்படுத்துவது, தமிழக அரசின் அரசாணை மற்றும் அறிவுரைகளை மீறும் செயலாகக் கருதப்படுகிறது. அரசின் அனுமதி அங்கீகாரம் பெற்றுச் செயல்படும் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் அரசின் ஆணைகளையும், அறிவுரைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

எனவே இந்த விவகாரம் சார்பாகப் பெறப்படும் புகார்கள் உறுதி செய்யப்படும் நிலையில் அரசு விதிகளின்படி சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைத் தனியார் பள்ளிகளின் தாளாளர்கள்/ முதல்வர்களுக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் நெருக்கடியான காலகட்டங்களில் அரசின் அறிவுரைகள் மற்றும் அரசாணையைப் பின்பற்றி அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவது பள்ளி நிர்வாகத்தின் தலையாயக் கடமை. இதனை உணர்ந்து செயல்பட அனைத்துத் தனியார் பள்ளிகளின் தாளாளர், முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்''.

இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x