Published : 03 Jun 2020 06:37 PM
Last Updated : 03 Jun 2020 06:37 PM
10,11 ,12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இணைய தளத்தில் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
இந்த ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற தளத்தில் மாணவர்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''கரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 15.06.2020 முதல் 25.06.2020 வரையும் நடைபெற உள்ளன. 26.03.2020 அன்று நடைபெற இருந்த மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு 16.06.2020 அன்றும், 24.03.2020 அன்றும் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு கரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக எழுதாத தேர்வர்களுக்கு மட்டும் 18.06.2020 அன்றும் நடைபெறவுள்ளன.
மேற்குறிப்பிட்ட தேர்வுகளை எழுதவுள்ள அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) 04.06.2020 பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று HALL TICKET என்ற வாசகத்தினை க்ளிக் செய்து தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வர்கள் தேர்வுகள் தொடர்பான விவரங்களை அறிய, தேர்வுக் கூட நுழைவுச்சீட்டின் கீழ்ப்பகுதியில் அச்சிடப்பட்டுள்ள அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் 04.06.2020 பிற்பகல் முதல் தங்கள் பள்ளித் தலைமையாசிரியரைத் தொடர்பு கொண்டு தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று HALL TICKET என்ற வாசகத்தினை க்ளிக் செய்து தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியினை இணையதளம் மூலம் பதிவு செய்து தாங்களே தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
----
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT