Published : 27 May 2020 07:23 PM
Last Updated : 27 May 2020 07:23 PM
கோவை மாவட்டத்தில் இன்று தொடங்கிய பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 3,200 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பின்பே அவர்கள் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. கரோனா அச்சத்தால் தேர்வெழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மறு அட்டவணை தயாரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் இருமுறை ஒத்திவைக்கப்பட்ட, விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது. இதன்படி கோவையில் பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அவிலா கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிந்தி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, நேரு வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, பிரில்லியன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மான்செஸ்டர் சர்வதேசப் பள்ளி ஆகிய 7 மையங்களிலும், பொள்ளாச்சியில் பிகேடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவாலிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சுபாஷ் மெட்ரிக் பள்ளி, பிவிஎன் மெட்ரிக் பள்ளி ஆகிய 4 மையங்களிலும் என 11 இடங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது.
முதல் நாளான இன்று விடைத்தாள் திருத்தும் பணிக்கு வந்த ஆசிரியர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு சளி, காய்ச்சல் பாதிப்புகள் உள்ளனவா? என்று பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, அவர்கள் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இம்மையங்களில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா, எஸ்எஸ் குளம் கல்வி மாவட்ட அலுவலர் ஆர்.கீதா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
விடைத்தாள் திருத்தும் பணி குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
’’இப்பணியில் 3,200 ஆசிரியர்கள், முதன்மைத் தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்கள் தலா 375 பேர், 2,250 உதவித் தேர்வாளர்கள், 200 அலுவலகப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், இம்மைய வளாகம், வகுப்பறைகள், கழிப்பிடங்கள் போன்றவை கிருமிநாசினி கொண்டு இருமுறை சுத்தம் செய்யப்படுகின்றன. ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் முகக் கவசம் அணிந்து பணியாற்றுகின்றனர். உரிய சமூக இடைவெளியைப் பின்பற்றி அவர்களுக்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்கப்படுகிறது.
ஆசிரியர்கள் தடையின்றி தேர்வு மையங்களுக்கு வந்து செல்லும் வகையில், 44 வழித்தடங்களில் 74 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளை ஒருங்கிணைக்க 74 ஒருங்கிணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகரக் காவல் ஆணையர் சுமித்சரண், காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில் மையங்களுக்குத் தலா 2 காவலர்கள் தேர்வு மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்களுக்குத் தினமும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்’’.
இவ்வாறு கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT