Published : 26 May 2020 07:50 PM
Last Updated : 26 May 2020 07:50 PM
கம்பெனி செயலர் படிப்பு பி.காம் படிப்புக்கு இணையானது என சான்றிதழ் கேட்டு மின்வாரிய ஊழியர் அளித்த மனுவை பரிசீலிக்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை திருநகரை சேர்ந்த கலைவாணி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
நான் மதுரை மின்வாரிய கணக்கு பிரிவில் உதவியாளராக 2017 முதல் பணிபுரிந்து வருகிறேன். மின்வாரியத்தில் கணக்கு மேற்பார்வையாளர் பணியிடம் காலியாக உள்ளது. அந்தப் பதவி உயர்வுக்கு பி.காம் அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட சவுராஷ்டிரா கல்லூரியில் பிசிஎஸ் (கம்பெனி செயலர்) பட்டம் பெற்றுள்ளேன். இந்தப்படிப்பு பி.காம் படிப்புக்கு இணையானது என தமிழக உயர் கல்வித்துறை 2018 மார்ச் 15-ல் அரசாணை பிறப்பித்துள்ளது. எனவே பி.சி.எஸ் படிப்பு பி.காம் படிப்புக்கு இணையானது என சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜெ. நிஷா பானு முன்பு வீடியோ கான்பரன்சில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பினேகாஸ் வாதிடுகையில், பெரியார் பல்கலைக்கழகத்தில் பிசிஎஸ் படிப்பு பி.காம் படிப்புக்கு இணையானது என சான்றிதழ் வழங்கப்படுகிறது என்றார். பல்கலைக்கழகம் சார்பில் வழக்கறிஞர் சக்திகுமரன் வாதிட்டார்.
பின்னர், மனுதாரரின் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT