Last Updated : 25 May, 2020 06:49 PM

 

Published : 25 May 2020 06:49 PM
Last Updated : 25 May 2020 06:49 PM

பொதுமுடக்கத்திலிருந்து வெளியில் வரும் மாணவர்களைப் பக்குவப்படுத்த ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி!

பொது முடக்கத்தால் மூன்று மாதங்களுக்கு மேல் வீட்டில் இருந்துவிட்டு பள்ளிக்கு வரும் மாணவர்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்து நாகையில் ஆசிரியர்களுக்கு இன்று ஆன்லைன் மூலம் உளவியல் முதலுதவிப் பயிற்சி அளிக்கப்பட்டது.

’குழந்தை நேயப்பள்ளி கூட்டமைப்பு’ என்ற அமைப்பு இப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. தன்னார்வமுள்ள ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே இணையம் வழியாக இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் சுடரொளி, நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கி.பாலசண்முகம், ஆகியோர் பயிற்சியின் நோக்கத்தை விளக்கினர்.

‘மைண்ட் சோன்’ அமைப்பின் நிறுவனர் டாக்டர். சுனில் குமார் விஜயன், இணை நிறுவனர் டாக்டர் ஜெயசுதா காமராஜ் ஆகியோர் ஆசிரியர்களுக்கு உளவியல் ரீதியிலான பயிற்சி அளித்தனர்.

"பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரை முதலில் ஆற்றுப்படுத்தவேண்டும். அவர்களுக்குத் தேவையான அவசியமான பொருட்களைப் பெற நாம் உதவ வேண்டும். நாம் சந்திக்கும் நான்கில் ஒரு நபர் உளவியல் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். கரோனா போன்ற பேரிடரில் களப்பணியாளர்களாகப் பணியாற்ற ஆசிரியர்கள் முன்வரவேண்டும்" என்றார் டாக்டர் சுனில்.

"குழந்தைப் பருவத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவுதல் வழியாக ஆரோக்கியமான மக்களை உருவாக்குவதில் ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். வகுப்பறையில் மாணவர்களின் உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது போலவே மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாணவர்களின் வாழ்வியலுக்கு மனநலம் மிகவும் அவசியம்" என்று எடுத்துரைத்தார் டாக்டர் ஜெயசுதா.

இப்பயிற்சியில் தஞ்சாவூர் மற்றும் நெல்லை மண்டலங்களுக்கு உட்பட்ட எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 62 ஆசிரியர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ்.மணிமாறன் நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x