Published : 25 May 2020 01:04 PM
Last Updated : 25 May 2020 01:04 PM
கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தங்களிடம் படிக்கும் ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு, ரூ.650 மதிப்பிலான மளிகைப் பொருட்கள் வழங்கி, உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், பிறப்பிக்கப்பட்ட ஊடரங்கு உத்தரவு காரணமாக வேலைவாய்ப்பின்றி ஏழை, எளிய மக்கள் பலர் உணவின்றித் தவித்த நிலையில் அரசும், தனியார் அமைப்புகளும் அவர்களுக்கு உணவு வழங்க முன்வந்தன.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும் பலர் இன்னும் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். தன்னார்வலர்கள் பலர் உணவுப் பொருட்களை ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணமாக வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் ஏழை மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி, உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
கோவையை அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் அமைந்துள்ளது விசிவி அரசு மேல்நிலைப் பள்ளி. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நடத்தப்பட்டு வரும் இப்பள்ளியில் 850 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் பணியாற்றும் வரும் ஆசிரியர்கள், தங்களிடம் படிக்கும் மாணவர்களில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கத் திட்டமிட்டு, அனைவரும் நன்கொடை வழங்க முன்வந்தனர். அந்தத் தொகைக்கு ஏற்றவாறு மளிகைப் பொருட்கள் வாங்கி மாணவர்களுக்கு வழங்கினர்.
இந்நிகழ்வில் எஸ்எஸ் குளம் கல்வி மாவட்ட அலுவலர் ஆர்.கீதா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.கண்ணன் மற்றும் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.
இதுகுறித்து வெள்ளக்கிணறு விசிவி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஏ.ஆர்.பரிமளா கூறியதாவது:
''ஊரடங்கால் பாதிக்கப்பட்ட எங்கள் மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவத் திட்டமிட்டு, 40 ஆசிரியர்கள் அனைவரும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் பங்களித்தோம். பின்னர் ஒவ்வொரு வகுப்பிலும் படிக்கும் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள மாணவர்கள் விவரங்களை ஆசிரியர்கள் மூலமாக அறிந்து, 150 பேரைத் தேர்வு செய்தோம்.
அவர்களுக்கு ரூ.650 மதிப்புள்ள அரிசி, பருப்பு, கோதுமை மாவு, எண்ணெய், சர்க்கரை, புளி, தேயிலைத்தூள், சோப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உணவுப் பொருட்கள் தொகுப்பை வழங்கினோம்.
மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்து, உரிய சமூக இடைவெளியில் நின்று பொருட்களை மகிழ்வுடன் வாங்கிச் சென்றனர். இதேபோல் இப்பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்களையும் வரவழைத்து அவர்களுக்கு இதேபோல் நிவாரணப் பொருட்களை வழங்கினோம்''.
இவ்வாறு தலைமை ஆசிரியை கூறினார்.
இதுகுறித்து பயனாளிகளான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிலர் கூறும்போது, ''வகுப்பில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள், அதையும் கடந்து எங்கள் குடும்பச் சூழலை அறிந்து, இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையில் எங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கியுள்ளனர். நாங்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளோம். இந்நிலையில் ஆசிரியர்கள் எங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கியுள்ளது எங்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. அவர்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT