Published : 24 May 2020 03:06 PM
Last Updated : 24 May 2020 03:06 PM
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கான உத்தரவு நகலை பயணத்தின்போது, இ-பாஸ்க்கு பதிலாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நெல்லை, தென்காசி மாவட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முன்வைத்துள்ளனர்.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக திருநெல்வேலி, தென்காசி மாவட்டக்கிளை சார்பில் மாவட்டத் தலைவர் முருகன், மாவட்டச் செயலாளர் பாபுசெல்வன் ஆகியோர் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
வெளி மாவட்ட மற்றும் உள் மாவட்ட ஆசிரியர்கள் பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு வந்து செல்ல ஏதுவாக போதிய பேருந்து வசதி செய்துதர வேண்டும்.
மதிப்பீட்டுப் பணிக்கான உத்தரவு நகலை பயணத்தின்போது, இ-பாஸ்க்கு பதிலாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் ஆசிரியர்களுக்கு முகக்கவசம், கையுறை, சானிட்டைசர் போன்றவற்றை தினமும் வழங்க வேண்டும்.
மையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், காற்றோட்டம், கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். தேர்வுத்துறையால் நிர்ணயிக்கப்பட்ட ஒவ்வொரு பாடத்துக்கும் உரிய எண்ணிக்கையிலான விடைத்தாள்களை மட்டுமே மதிப்பீட செய்ய ஒவ்வொரு நாளும் வழங்க வேண்டும். மதிப்பீட்டு மையத்துக்கு உள்ளேயே சுத்தமான உணவு வழங்கக்கூடிய சிற்றுண்டி மையம் அமைக்க வேண்டும்.
முதன்மைத் தேர்வாளர், கூர்ந்தாய்வாளர், உதவி தேர்வாளர் போன்ற பணிகள் ஆசிரியர்களின் பணி மூப்பு அடிப்படையில் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT