Published : 15 May 2020 07:47 PM
Last Updated : 15 May 2020 07:47 PM

10-ம் வகுப்புத் தேர்வுக்கு பழங்குடி மாணவர்கள் எப்படித் தயாராவார்கள்?- தேர்வைத் தள்ளிவைக்க கல்வியாளர்கள் கோரிக்கை

கரோனா ஊரடங்குக்காகப் பூட்டப்பட்டிருக்கும் கொங்காடை கிராமத்து அரசுப் பள்ளி.

தமிழகத்தில் ஜூன் முதல் தேதி 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு தொடங்கும் எனும் அறிவிப்பு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. தேர்வுக்குத் தடை விதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றமும் சொல்லிவிட்ட பின்னர், ஜூன் முதல் தேதி தேர்வு நடப்பது உறுதியாகிவிட்டது. கரோனா ஊரடங்கு விடுமுறையில் புத்தகங்களை மறந்து ஆனந்தமாகப் பொழுதைக் கழித்த மாணவர்கள், தேர்வை எதிர்கொள்வது எப்படி என்று திகைத்துப் போயிருக்கிறார்கள்.

குறிப்பாக, மலைவாழ் மக்களின் பிள்ளைகளுக்கு இந்தச் செய்தி பேரிடியாகவே இருக்கும் என்று கவலைப்படுகிறார்கள் கல்வியாளர்கள். ‘ஆன்லைனில் பயிலும் தனியார் பள்ளிக் குழந்தைகளும் அரசுப் பள்ளி குழந்தைகளும் மலைகிராம குழந்தைகளும் பெறும் மதிப்பெண்களின் மதிப்பு ஒன்றா? பள்ளி திறந்த பின் 15 நாட்களுக்காவது பாடம் நடத்திய பின்னர்தான் தேர்வை நடத்த வேண்டும்’ என்று வலியுறுத்தி ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் சத்தியமங்கலம் ‘சுடர்’ அமைப்பின் நிறுவனர் நடராஜன். அவரிடம் பேசினோம்.

“ஈரோடு மாவட்டம் பர்கூர், தாளவாடி, கடம்பூர் மலைகளில் உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள் என கணக்கிட்டால் 25 பள்ளிகள் வரும். ஒரு பள்ளிக்குச் சராசரியாக 50 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதாகத் தோராயமாகக் கணக்கிட்டாலும் 1,250 பேர் வருவார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பழங்குடிகளின் குழந்தைகளே. அடுத்த நிலையில் உள்ளவர்கள் லிங்காயத்து சமூக மாணவர்கள். இவர்கள் இருப்பது எல்லாம் மலைக் காடுகளில்தான். பெரும்பாலான மாணவர்களின் வீடுகளுக்கும் பள்ளிகளுக்கும் இடையில் 25- 35 கிலோமீட்டர் தூரம்கூட இருக்கும். பஸ் வசதியும் கிடையாது. அதனால் இவர்கள் பெரும்பாலும் உண்டு, உறைவிடப் பள்ளியிலேயே படிக்கிறார்கள்.

அந்த வகையில் பர்கூர் மலைகளில் மட்டும் பர்கூர் மற்றும் கொங்காடை என்ற கிராமத்தில் தலா ஒரு பழங்குடியின உண்டு, உறைவிடப் பள்ளி இருக்கிறது. கொங்காடைக்கு பஸ் வசதியில்லை. இங்கிருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பர்கூர்தான் இந்த மாணவர்களுக்குத் தேர்வு மையம். இந்த கொங்காடை பள்ளியில் 10-ம் வகுப்பு படிப்பவர்களின் நிலை மிக மோசம். ஆசிரியர்கள் இல்லை என்பதில் ஆரம்பித்து, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கே ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது என்பது வரை நிறைய பிரச்சினைகள்.

பொது முடக்க சமயத்தில் கரும்பு வெட்டுவது, ஆடு மேய்ப்பது என்று மாணவர்கள் சுற்றித் திரிகிறார்கள். பல மாணவர்களுக்கு எப்போது தேர்வு நடக்கிறது என்றே தெரியவில்லை. திடீரென்று தேர்வு வைத்தால் இவர்கள் என்ன செய்வார்கள்? நகர்ப்புற மாணவர்களை மனதில் வைத்தே இப்படியான அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். முதலில் 15 நாட்களுக்குப் பாடம் நடத்தி, திருப்பத் தேர்வு வைத்து அதன் பின்னர் பொதுத் தேர்வு நடத்தலாம் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். மாணவர்களின் நலன் கருதி அரசுதான் நல்ல முடிவை எடுக்க வேண்டும்” என்றார் சுடர் நடராஜன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x