Published : 13 May 2020 01:48 PM
Last Updated : 13 May 2020 01:48 PM
உலகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் கரோனா அச்சத்தால் மூடப்பட்டிருப்பதால் 154 கோடி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என்று யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. தீவிரமான கல்வித் திட்டங்களை வகுக்கத் தவறினால் கரோனா காலத்தின் விளைவு கல்வியை கடுமையாகப் பாதிக்கும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கற்றல் திறன் மற்றும் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படும் என்று உலக வங்கியின் கல்விக் குழு எச்சரித்துள்ளது.
அனைத்து சிறுமிகள் மற்றும் சிறுவர்களுக்கு இலவச, சமமான, தரமான தொடக்க மற்றும் மேல்நிலைக் கல்வியை உலகம் முழுவதும் உறுதி செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை 'நிலையான கல்வி இலக்கு - 4' என்ற தலைப்பின் கீழ் ஐ.நா.சபை வகுத்துள்ளது. இந்த இலக்கை நோக்கிய பயணத்தில் ஏற்கெனவே உலக நாடுகள் பின்தங்கி நிற்கின்றன. இந்நிலையில் பெருந்தொற்றுப் பரவல் காரணமாக இலக்கை அடையும் தூரம் மேலும் அதிகரித்துள்ளதாக உலக வங்கி தற்போது சுட்டிக்காட்டி இருக்கிறது.
இச்சூழலை சமாளிக்க ஐ.நா. சபைக்கு உட்பட்ட நிறுவனங்களான யுனெஸ்கோ, யூனிசெஃப், உலக உணவுத் திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து வழிகாட்டுதல்களை உலக வங்கி வகுத்துள்ளது. இதுகுறித்து உலக வங்கியின் சர்வதேச இயக்குநர் ஜெய்மி சாவெத்ரா கூறுகையில், "கரோனா பெருந்தொற்று உலகத்தைப் பீடிப்பதற்கு முன்னால் தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிப் படிப்பைப் படிக்க வேண்டிய வயதினரில் 25 கோடியே 80 லட்சம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர்.
தற்போது கரோனா உலகத்தைப் பிடித்தாட்டும் நிலையில் அதன் தாக்கம் கல்வி மீது படுபயங்கரமாக இருக்கப் போகிறது. முதலாவதாக நோய்த் தொற்று அச்சமானது உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளை மூடச் செய்துவிட்டது. நம்முடைய வாழ்நாளில் இதுவரை கண்டிராத பேரதிர்ச்சி இது. அதிலும் தற்போது நம் முன்னால் எழுந்து நிற்கும் சிக்கல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்பதால் நாம் அடையப்போகும் பின்னடைவு படுபயங்கரமாக இருக்கக்கூடும். அதேநேரத்தில் இந்த அதிர்ச்சியை நம்மால் நல்லதொரு வாய்ப்பாகவும் மாற்ற முடியும்" என்று ஜெய்மி சாவெத்ரா தெரிவித்தார்.
மேலும் உலக வங்கியின் வழிகாட்டுதல்களில் இடம்பெற்றிருக்கும் சில புள்ளிகள் கவனிக்கத்தக்கவை:
"முதலாவதாகப் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் இருந்து மீண்டெழ வேண்டும். அதற்கு மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். பள்ளிகளைத் திறப்பது குறித்தும் மிண்டும் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து வருவது குறித்தும் அனைத்து நாடுகளும் திட்டமிட வேண்டும். அப்படியானால் இடைநிற்றலைத் தடுப்பதற்கான, சுகாதாரமான பள்ளிச் சூழலைக் கட்டமைப்பதற்கான, கல்வி கற்பிக்க முடியாமல் போன காலகட்டத்தைத் துரிதமாகவும் சாதுரியமாகவும் மீண்டு வருவதற்கான வழியைக் கண்டறிய வேண்டும். இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் பழைய குளறுபடிகளைச் செய்யாமல் தற்போது கண்டடைந்திருக்கும் புதிய மாற்றத்துக்கான கல்வி முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு மூன்று அடுக்குப் பணிகளைச் செய்ய வேண்டும்.
மீண்டெழுவது, தொடர்ச்சியை நிலைநாட்டுவது, மேம்படுத்துவது மற்றும் வேகமெடுப்பது ஆகிய மூன்று நிலைகள் இதில் உள்ளன. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் என்ற விதியை தளர்த்தி வருவதால் மேம்படுத்துவது மற்றும் வேகமெடுப்பது பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மேம்படுத்துவது மற்றும் வேகமெடுப்பது திறப்பது, மாணவர்களின் கல்வி இடைநின்று போகாதபடி உரிய நடவடிக்கைகள் எடுப்பது, கற்பித்தல் முறையில் மாற்றங்களை நடைமுறைப்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்".
இவ்வாறு கரோனா காலத்தில் இருந்து மீண்டு வந்து பள்ளிக் கல்வியைத் தொடங்குவதற்கான வழிகாட்டுதலை உலக வங்கி வழங்கி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT