Published : 11 May 2020 07:54 PM
Last Updated : 11 May 2020 07:54 PM
முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தக் கரோனா தொற்று பேரிடர் காலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தங்களிடம் படிக்கும் பிள்ளைகளின் வீடு தேடிப் போய் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை வழங்கி தங்களது மனிதநேயத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் சிவகங்கை மாவட்டம், கீழக்கண்டனி அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயா, அங்கு பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சாந்தி, கோவிந்தராஜ் ஆகியோர் தங்களது கூட்டு முயற்சியில் தங்களது பள்ளியில் படிக்கும் 70 மாணவ- மாணவிகளுக்கு அவர்கள் இல்லம் தேடிச் சென்று கிருமிநாசினி, சோப்பு, பற்பசை, தேங்காய் எண்ணெய், கொண்டைக்கடலை, பாசிப்பருப்பு, தட்டைப்பயறு, மொச்சைப்பயறு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.
இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் பேசிய அந்த ஆசிரியர்கள், “நாங்கள் பணி செய்யும் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அனைவருமே அடித்தட்டுக் குடும்பத்துப் பிள்ளைகள்தான். திருவிழாக்களில் வளையல் விற்றுப் பிழைப்பு நடத்தும் குடும்பத்துப் பிள்ளைகளும் அதில் நிறைய இருக்கிறார்கள். ஊரெல்லாம் திருவிழா நடக்கும் இந்த நேரத்தில் பொதுமுடக்கம் அமலில் இருக்கிறது. இதனால் அந்தக் குடும்பங்கள் எவ்வளவு கஷ்டப்படும் என்று சிந்தித்தோம். அவர்களுக்கு அரிசி, பருப்பு ரேஷனில் கிடைத்து விட்டாலும் மற்றவற்றுக்கு என்ன செய்வார்கள் என யோசித்தோம். அதனால்தான் இந்தப் பொருட்களை வாங்கி அவர்களுக்குக் கொடுத்தோம்.
ஆசிரியர்களாகிய நாங்கள் இதுவரை எத்தனையோ இடங்களுக்கு நன்கொடை கொடுத்திருக்கிறோம். கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தி இருக்கிறோம். ஆனால், அப்போதெல்லாம்கூட எங்களுக்கு ஏற்படாத நெகிழ்ச்சியை, கஷ்டத்தில் இருக்கும் பிள்ளைகளைத் தேடிப்போய் உதவிய தருணத்தில் உணர்ந்தோம்” என்றார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT