Published : 04 May 2020 05:47 PM
Last Updated : 04 May 2020 05:47 PM
கரோனா நோய்த் தொற்று பரவல் அச்சத்தால் கடந்த மார்ச் 24-ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுத் தேர்வு எழுதக் காத்திருந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்குத் தேர்வு நடத்தி முடிக்க முடியவில்லை. மாநில வாரியப் பள்ளிகள், சி.பி.எஸ்.இ.பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வாரியப் பள்ளிகளும் இந்தச் சிக்கலில் சிக்கியுள்ளன. இந்நிலையில் பொதுத் தேர்வை எழுத முடியாமல் இருக்கும் மாணவர்கள் உயர்கல்வி மேற்கொள்ள என்ன செய்யலாம் என்கிற குழப்பம் நிலவுகிறது. இதற்கான தீர்வை ஹரியாணா மத்தியப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆர்.சி.குஹாத் தலைமையிலான 12 உறுப்பினர்கள் கொண்ட குழு பல்கலைக்கழக மானியக் குழுவுக்குப் பரிந்துரைத்துள்ளது. இதில் அவர்கள் முன்வைத்திருக்கும் பல ஆலோசனைகளில் ஒன்று பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
மருத்துவப் படிப்புக்கு நடத்தப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வான நீட் போன்று கலை, அறிவியல் படிப்புகளுக்கும் தேசிய மற்றும் மாநில அளவில் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று என இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதே கருத்து புதிய கல்விக் கொள்கை 2019 வரைவிலும் இடம்பெற்று நாடு முழுவதும் எதிர்ப்பலைகளை உண்டாக்கியது. இந்நிலையில் தற்போதும் வெளிவந்திருக்கும் இந்தப் பரிந்துரை மீண்டும் கண்டிக்கப்பட்டு வருகிறது. கிராமப்புற ஏழை, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்கள், முதல் தலைமுறைப் பட்டதாரியாக எத்தனிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை முடக்கிப் போடும் திட்டம் இது என்று அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பல்கலைக்கழக மானியக் குழு இந்தப் பரிந்துரையை ஏற்கவில்லை என்று ஒரு புறம் சொல்லப்படுகிறது. ஆனாலும், தேசிய கல்விக் கொள்கையிலேயே இந்தத் திட்டம் இடம்பெற்றிருப்பதால் இன்று இல்லையென்றாலும் கூடிய விரைவில் இது பூதாகரமான சிக்கலாக எழக்கூடும்.
இப்படி இருக்க கலை, அறிவியல் பட்டப்படிப்புகளை மேற்கொள்ள நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்துக்கான அவசியம் என்ன என்ற கேள்வியோடு கல்வியாளர்களை அழைத்துப் பேசினோம்.
எந்த பாடத்திட்டத்தின்படி கேள்வித் தாள் தயாரிக்கப்படும்?
"நாடு முழுவதற்குமான ஒரே மாதிரியான பாடத்திட்டம் இல்லாதபோது ஒரே மாதிரியான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது மட்டும் எப்படி சரியான தீர்வாக இருக்க முடியும் என்பதுதான் முதல் கேள்வி. நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான வாதங்களிலும் இதுவே முதல் இடம் வகிக்கிறது. அது மட்டுமின்றி கரோனா கால சிக்கலுக்கு இடைக்கால தீர்வாக இதைப் பரிந்துரைப்பது அர்த்தமற்றது. உதாரணத்துக்கு நுழைவுத் தேர்வை நடத்தலாம் என்று முடிவெடுத்தாலும் நாடு முழுவதற்குமான தேர்வு எனும்போது எந்தப் பாடத்திட்டத்தின்படி கேள்வித்தாள் தயாரிக்கப்படும்? ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் வெவ்வேறு பாடத்திட்டம், இது தவிர தன்னாட்சி கல்லூரிகள் தங்களுக்கென தனிப் பாடத்திட்டம் வகுத்துள்ளன. இப்படி இருக்க ஒரே பாடப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதானாலும் அது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடுமே?
முக்கியமாக நுழைவுத் தேர்வு என்றாலே விரிவான விடை அளிப்பதாக அல்லாமல் கொள்குறி முறையில்தான் தேர்வு நடத்தப்படும். அப்படியானால் அந்த வகையில் பதிலளிக்க மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டுமே? இப்படி மேலும் பல சிக்கலான கேள்விகள் இது தொடர்பாக உள்ளன. மொத்தத்தில் கரோனா ஏற்படுத்தி இருக்கும் இடர்ப்பாட்டில் இருந்து விடுபட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி அளிக்க நுழைவுத் தேர்வு என்பது ஒரு போதும் தீர்வாகாது. இதற்குப் பதில் பள்ளியில் இருந்து கல்லூரிக்குள் மாணவர்களை அழைத்து வர பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு மற்றும் கடைசியாக நடத்தப்பட்ட இடைநிலைத் தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சியையும் மதிப்பெண்களையும் முடிவு செய்யலாம்" என்கிறார் மதுரை காமராஜர் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் நாகராஜன்.
பயிற்சி மையங்கள் முளைக்கும் அபாயம்
"பல நாட்கள் வீடடங்கி இருப்பதால் வயது முதிர்ந்தவர்களான நமக்கே சோம்பலாக இருக்கிறது. இதில் பள்ளிப் பருவக் குழந்தைகள் மட்டும் பொதுத் தேர்வு எழுத வேண்டும், போதாததற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்றெல்லாம் அடுக்கடுக்காக கட்டளை இடுவதில் என்ன நியாயம் இருக்க முடியும் சொல்லுங்கள்! சரி அதை விட்டுவிடுவோம். மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்காவது நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம்தான். அவற்றுக்குப் பொதுத் தேர்வு வைப்பது என்பதில் முன்னும் பின்னுமாக சில கருத்துகள் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், கலை அறிவியல் பாடங்களை எடுத்துக் கொண்டோமானால் அவற்றுக்குப் பொதுவான பாடத்திட்டம் என்ற வரையறையே கிடையாது. சரி அந்தந்த மாநிலங்களே அவரவர்களுக்கான தேர்வை நடத்தலாம் என்பதுகூட இங்கு பொருந்தாத வாதமே.
நுழைவுத் தேர்வு நடத்தினாலும் கலந்தாய்வு அடிப்படையில் யார் யாருக்கு எந்தக் கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் என்பது பொதுத் தளத்தில் தீர்மானிக்கப்படும் அல்லவா. அப்படியானால் மதுரை பக்கத்தில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு சென்னையில் உள்ள கலைக் கல்லூரியில் படிக்க இடம் கிடைப்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது சொந்த ஊரைவிட்டு தொலைதூரம் இருக்கும் ஊரில் அப்பெண்ணைப் படிக்க வைக்க எத்தனை பெற்றோர் ஒப்புக்கொள்வார்கள்? ஏதோ மதுரையில் இருக்கும் ஒரு கல்லூரிக்கு வேண்டுமானால் அனுப்பி வைப்பார்கள். அல்லது மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்துறை படிப்பானால் கூடுதல் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆனால், கலை படிப்புகள் எனும்போது இவ்வளவு மெனக்கெட்டு, செலவு செய்து கிராமத்து இளம் பெண் உயர்கல்வி கற்க எத்தனை பேர் ஒத்துழைப்பார்கள் என்பது இன்றைய காலகட்டத்திலும் விடையில்லாத கேள்வியே. இதே கேள்வி பட்டியலின மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கும் பொருந்தும். இதில் கலை அறிவியல் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு என்று வந்துவிட்டால் அதை வைத்து வசூல் வேட்டை காணப் பயிற்சி மையங்கள் முளைக்கும் அபாயம் உள்ளது" என்கிறார் மதுரை அருகில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பணிபுரியும் தமிழ்த் துறைப் பேராசிரியர் ஒருவர்.
பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டிய பருவத்தில் இருக்கும் இந்திய மாணவர்களில் 26.3 சதவீதத்தினர் மட்டுமே கல்லூரிக்குள் அடியெடுத்து வைகிறார்கள் என்பது இன்றைய நிலை. இதுகூட கடந்த பத்தாண்டுகளில் அடைந்த வளர்ச்சியே. அப்படி இருக்க அவர்களில் 85 சதவீதத்தினருக்கும் புகலிடமாகக் கலை அறிவியல் படிப்புகளே இருந்து வருகின்றன. அவர்களில் பெரும்பாலோர் பின்தங்கிய சமூக, பொருளாதாரப் பின்புலத்தைச் சேர்ந்த குழந்தைகளே. அப்படி இருக்கக் கலை அறிவியல் படிப்புகளுக்குள் அடியெடுத்து வைக்கும் நுழைவாயிலில் நுழைவுத் தேர்வு என்னும் தடுப்புச் சுவர் எழுப்புவது கோடிக்கணக்கான இந்தியர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி விடக்கூடிய பாதகமான கல்விக் கொள்கையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT