Published : 04 May 2020 02:01 PM
Last Updated : 04 May 2020 02:01 PM
ஊரடங்கு விடுமுறையை ஒட்டி, மாணவர்களுக்கு ஆன்லைனில் 49 புதிய படிப்புகளை ஏஐசிடிஇ அறிமுகம் செய்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மே 17 வரை மத்திய அரசு சமீபத்தில் நீட்டித்துள்ளது. ஊரடங்கில் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், பல்வேறு ஆன்லைன் வகுப்புகளை மத்திய, மாநில கல்வித் துறைகள் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. இதற்கிடையே, பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி மாணவர்களுக்காக ஏஐசிடிஇ பல்வேறு ஆன்லைன் வகுப்புகளை முன்னெடுத்துள்ளது.
அந்த வகையில் 49 புதிய, இலவசப் படிப்புகளை ஏஐசிடிஇ அறிமுகம் செய்துள்ளது. இதில் டிப்ளமோ படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் மற்றும் திறன்மிகு வகுப்புகள் அடங்கும். சில படிப்புகள் அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் ஏற்றதாக இருக்கும். சில படிப்புகள் அந்தந்த மாணவர்களுக்கு மட்டுமே ஏற்றவகையில் இருக்கும்.
மே 15 வரை பதிவு செய்துகொள்ளும் மாணவர்கள், படிப்புகள் அனைத்தையும் இலவசமாகக் கற்றுக் கொள்ளலாம். அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இது தொடர்பாக ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''ஊரடங்கு நேரத்தில் கற்றல் தடைப்படக் கூடாது. அதிர்ஷ்டவசமாக நிறைய நிறுவனங்கள் தங்களின் படிப்புகளை இலவசமாக வழங்க முன்வந்துள்ளன. மே 15 வரை பதிவு செய்பவர்கள் செலவில்லாமல் கற்கலாம்.
அதேநேரத்தில் நிறுவனங்களின் கற்றல் உள்ளடக்கங்களுக்கு ஏஐசிடிஇ எந்த விதத்திலும் பொறுப்பாகாது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் விவரங்களை ஏஐசிடிஇ இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT