Published : 03 May 2020 12:21 PM
Last Updated : 03 May 2020 12:21 PM
சிறுக, சிறுக சேமித்த ரூ.1 லட்சத்தை முதல்வரின் கரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார், கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவி.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊடரங்கு உத்தரவால், பொதுமக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
குடியிருப்புப் பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளித்தல், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தல், அவருடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துதல், பொதுமக்களுக்கு நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்தல் போன்ற பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இப்பணியை தடையின்றி துரிதப்படுத்தும் வகையில், அரசின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையிலும் அரசு சார்ந்த அமைப்புகள், தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி அளித்து வருகின்றன.
அந்தவகையில் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ப.அனுஸ்ரீ தான் சிறுக, சிறுக சேமித்த ரூ.1 லட்சம் தொகையை, முதல்வர் நிவாரண நிதிக்கு காசோலையாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் வழங்கினார்.
இது குறித்து மாணவி ப.அனுஸ்ரீ கூறும்போது, 'கோவை சரவணம்பட்டியை அடுத்த கீரணத்தம் அருகில் உள்ள பதாகாரன் தோட்டம் பகுதியில் பெற்றோர் பழனிசாமி-சாந்தாமணி ஆகியோருடன் வசித்து வருகிறேன்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி பி.காம். பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். பெற்றோர் எனக்கு செலவுக்கு கொடுக்கும் தொகையில் ஒரு பகுதியை வங்கிக் கணக்கில் கொஞ்சம், கொஞ்சமாக கடந்த சில ஆண்டுகளாக சேமித்து வந்தேன். ரூ.1 லட்சம் சேமித்து வைத்திருந்தேன்.
முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு பலர் உதவிக்கரம் நீட்டி வரும் வேளையில், நானும் பங்களிக்க விரும்பினேன். அதன்படி என்னுடைய சேமிப்புத் தொகை ரூ.1 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு, கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினேன்' என்றார்.
கல்லூரி மாணவியின் இச்செயலுக்கு அரசு அதிகாரிகள், கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT