Published : 30 Apr 2020 06:41 PM
Last Updated : 30 Apr 2020 06:41 PM

மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே பாடம் நடத்தும் மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி

பொதுமுடக்கத்தால் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் எல்லாம் பூட்டிக்கிடக்க, ஒரு சில கல்வி நிலையங்கள் ஆன்லைன் வழியே பாடம் நடத்துவதில் மும்முரமாக இறங்கியிருக்கின்றன.

அந்த வகையில் கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்திலும் ஆன்லைன் மூலம் தினமும் கற்பித்தலைத் தொடரும் பேராசிரியர்கள், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்துப் பாடம் நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இந்த வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவ - மாணவிகளுக்கு, வழக்கமான வகுப்புகளின் அட்டவணைப்படியே ஆன்லைன் மூலம் தினசரி பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த அரசு வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், இந்தியாவில் மொத்தமுள்ள ஏழு வனக் கல்லூரிகளில் முதன்மையானது. இங்கு பயின்றவர்களில் 110 பேர் இந்திய வனப் பணிக்குத் தேர்வாகி நாட்டில் உள்ள பல மாநிலங்களில் ஐ.எஃப்.எஸ் அதிகாரிகளாகப் பணியாற்றி வருகின்றனர். மேலும், பலர் வேளாண் விஞ்ஞானிகளாகவும், இருநூறுக்கும் மேற்பட்டோர் தமிழக அரசின் வனச்சரக அலுவலர்களாகவும் பணியில் உள்ளனர். இங்கு வனவியலின் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்நோக்கில் பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்க உத்தரவால் கடந்த மார்ச் 23-ம் தேதி, இக்கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் தங்கிப் படித்த கல்லூரி விடுதியைக் காலி செய்தனர். அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வேளாண் காடுகள், வேகமாக வளரும் புதியவகை மர வகைகளைக் கண்டறிதல், தொழிற்சாலை சார்ந்த மரங்களை மதிப்புக் கூட்டுதல், மலர்களிலிருந்து இயற்கை சாயம் தயாரித்தல், பெட்ரோலுக்கு மாற்றாக இயற்கை விதைகளில் இருந்து பயோ டீசல் உருவாக்குதல், வனம் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம், விவசாயம் சார்ந்த ஆராய்ச்சிகள் என முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு கல்வித் திட்டங்கள் இதனால் தடைப்பட்டன.

இனி எப்போது கல்லூரி மீண்டும் தொடங்கும் என யாரும் அறியாத நிலையில் மாணவர்களின் நலன் கருதி வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஆன்லைன் வழியே வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக முதல்வர் மற்றும் 45 பேராசிரியர்கள் வழக்கம் போல் காலை ஒன்பது மணிக்குக் கல்லூரி வந்துவிட, முன்பிருந்த வகுப்புகளின் அட்டவணைப்படி அந்தந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

துறை சார்ந்த பேராசிரியர்கள் காணொலி வழியே பாடங்களை நடத்துவதுடன் திரையில் தெரியும் மாணவர்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளித்தும் வருகின்றனர். மேலும், ஆன்லைன் மூலமே வகுப்புத் தேர்வுகளும் நடத்தப்பட்டு மதிப்பெண்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மூத்த பேராசிரியர் ஒருவர் பேசும்போது, “இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு மாணவ - மாணவிகளுக்கு இணையம் வழியாகப் பாடங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. கூடுதலாக இந்திய ஆட்சிப்பணி மற்றும் வனப் பணிக்காகப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. குறைந்தபட்சம் தினசரி ஆறு மணி நேரம் மாணவர்களுடன் தொடர்பில் உள்ளோம். நேரடியாகக் களத்திலும் ஆராய்ச்சிக் கூடங்களிலும் கற்க வேண்டியவை மட்டும் கல்லூரி திறக்கப்பட்டவுடன் தொடரும். அதற்கும் அவர்களைத் தயார்படுத்தி வருகிறோம்.

வனக் கல்லூரியைப் பொறுத்தவரை இது பிற கல்லூரியில் இருந்து வேறுபட்டது. இங்கு ஆராய்ச்சிக்காக வேளாண் காடுகள், பல்வேறு மர, தானிய மற்றும் மலர் வகைத் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விடுப்புக் காலத்தில் இவற்றையும் பராமரிப்பது மிக அவசியமாகிறது. எனவே கல்லூரியில் மாணவர்கள் இல்லை என்பதைத் தவிர கல்வி மற்றும் அது தொடர்பான அனைத்து வேலைகளும் முழுமையாக நடைபெற்றே வருகின்றன” என்றார்.

நெருக்கடியான நேரங்களில் புதிய உத்திகள் மூலம் வழக்கமான பணிகளைச் செய்வது என்பது இன்றைய நவீன உலகில் சாத்தியம்தான். ஆன்லைன் வகுப்புகளும் அதைத்தான் நிரூபிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x