Published : 29 Apr 2020 06:07 PM
Last Updated : 29 Apr 2020 06:07 PM

'இந்து தமிழ்' இணையதள செய்தி எதிரொலி: மாணவிகளின் சேவைக்குக் கிடைத்த அங்கீகாரம்

கன்னியாகுமரி மாவட்டம் அக்கனாவிளை கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜெனிசாவும் பள்ளி மாணவிகளான அனு, விஜி ஆகியோரும் சேர்ந்து தங்கள் கிராம மக்கள் அனைவருக்கும் தாங்களே முகக்கவசம் தைத்து, இலவசமாக விநியோகித்து வந்தனர்.

சேவை அமைப்புகள் கொடுக்கும் பழைய துணிகளைப் பெற்று அவர்களுக்கும் இலவசமாக முகக்கவசங்கள் தைத்துக்கொடுத்து வருகிறார்கள். இது பற்றி இந்து தமிழ் திசை இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

செய்தியைப் படித்துவிட்டு தஞ்சை மாவட்டம், திருக்கருக்காவூரில் ‘அக்கினிச் சிறகுகள்’ எனும் அறக்கட்டளையை நடத்திவரும் சிவசண்முகம் நம்மைத் தொடர்புகொண்டார். அந்த மாணவிகளின் சேவையைக் கவுரவிக்க விரும்பிய அவர், மாணவிகளுக்குத் தங்கள் அறக்கட்டளையின் சார்பில் தலா 500 ரூபாய் வீதம், மூவருக்கும் சேர்த்து 1,500 ரூபாயை சிறு பரிசாக அனுப்பிவைத்தார்

இந்த ஊக்குவிப்புத் தொகையை தங்கள் வங்கியில் இருந்து எடுத்த மாணவிகள் அடுத்து செய்ததும் சிறப்பான செயல். அப்படி என்ன செய்தார்கள்? அதை அவர்களே சொல்கிறார்கள். “இந்து தமிழ் இணையதளத்தில் செய்தி வெளியானதும் பலரும் பாராட்டினார்கள். தஞ்சாவூரில் இருந்து எங்கள் முகமே தெரியாத அண்ணன் 1500 ரூபாய் அனுப்பியிருந்தார். அப்போதுதான் எங்கள் ஊரில் நீண்டநாள்களாக கிருமிநாசினியும், பிளீச்சிங் பவுடரும் போடாமல் இருப்பது நினைவில் வந்தது. அந்தப் பணத்தை நமக்காக செலவுசெய்வதைவிட மேலும் சில தோழிகளோடு சேர்ந்து ஊருக்காகச் செலவுசெய்வது என முடிவெடுத்தோம்.

உடனே, கிருமிநாசினியும், பிளீச்சிங் பவுடரும் வாங்கி ஊர் முழுவதும் தெளித்தோம். மாணவிகள் என்பதால் வீட்டில் காசுவாங்கியெல்லாம் சேவைசெய்ய முடியாது. அதற்கான பொருளாதாரச் சூழலும் எங்கள் வீடுகளில் இல்லை. அதனால்தான் எங்களுக்குத் தெரிந்த தையலின் மூலம் உதவி வந்தோம். இந்த நிலையில், ‘இந்து தமிழ்’ மூலம் கிடைத்த பரிசுத்தொகை எங்கள் ஊரின் பொதுநலனுக்காக பயன்பட்டிருக்கிறது”என்று உற்சாகமாய் சொல்கிறார்கள் அந்த மாணவிகள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x