Published : 29 Apr 2020 02:52 PM
Last Updated : 29 Apr 2020 02:52 PM
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தலாம் என்று யுஜிசியால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகளின் வகுப்புகள், தேர்வுகள், நுழைவுத்தேர்வுகள் உட்பட அனைத்துக் கல்விப் பணிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து கல்வி ஆண்டு தாமதம் தொடர்பாக உயர்கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்கலைக் கழக மானியக் குழுவால் (யுஜிசி) அமைக்கப்பட்ட 12 பேர் அடங்கிய குழு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
அதில் இளங்கலை, முதுகலை மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வை நடத்த வேண்டும் எனவும் யுஜிசி பரிந்துரைத்துள்ளது. கரோனாவால் பல்வேறு பாடத்திட்ட வாரியங்கள் தேர்வுகளை நடத்தி முடிக்கவில்லை. இதனால் அவர்கள் பொது நுழைவுத்தேர்வை நடத்தி மாணவர் சேர்க்கையை முடிக்கலாம் எனவும் ஜூன் மாதத்தில் விடுமுறை அளித்து, ஜூலையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் என்றும் அக்குழு பரிந்துரைத்துள்ளது.
அத்துடன் கல்லூரிகளில் 2, 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திலும் முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் மாதத்திலும் வகுப்புகளைத் தொடங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்துக்குக் கட்டாயம் 6 நாட்களை வேலை நாட்களாக அனுமதிக்க வேண்டும் எனவும் அக்குழு தெரிவித்துள்ளது.
யுஜிசி இப்பரிந்துரைகள் அனைத்தையும் ஆலோசித்து முடிவெடுத்து, அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT