Last Updated : 29 Apr, 2020 11:08 AM

 

Published : 29 Apr 2020 11:08 AM
Last Updated : 29 Apr 2020 11:08 AM

கரோனா ஊரடங்கின் படிப்பினைகளைப் பின்பற்றினால் எதிர்காலம் சிறக்கும்: மதுரை வேளாண் கல்லூரி பேராசிரியர், ஆராய்ச்சி மாணவர் அறிவுரை

மதுரை

‘கரோனா ஊரடங்கு காலம் பல்வேறு படிப்பினைகளை கற்றுத்தந்துள்ளது. இவற்றை கரோனா இல்லாத காலத்திலும் பின்பற்றினால் எதிர்காலம் சிறக்கும்’ என மதுரை வேளாண் கல்லூரி போராசியர், ஆராய்ச்சி மாணவர் ஆகியோர் தெரிவித்துள்ளார்.

கரோனாவால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மத்திய அரசு அறிவித்த 2-ம் கட்ட ஊரடங்கு (மே 3 வரை) முடிய இன்னும் 5 நாள் உள்ளது. ஊரடங்கு நீடிக்குமா? அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்படுமா? அடுத்து என்ன நடக்கும் எனத் தெரியாமல் மக்கள் உள்ளனர்.

இதனிடையே கரோனா ஊரடங்கால் பல்வேறு பலன்கள் ஏற்பட்டுள்ளதாக மதுரை வேளாண் கல்லூரி பேராசிரியர் சி.சுவாமிநாதன், ஆராய்ச்சி மாணவர் மா.அன்பரசு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இருவரும் ‘இந்து தமிழிடம்’ இன்று கூறியதாவது:

நீல நிற நீண்ட வானம் என ஏட்டில் படித்திருக்கிறோம். ஆனால் மாசு படிந்து வானில் கரும்படலம் படர்ந்து நீல வண்ணம் ஒளிந்திருந்து எட்டிப்பார்த்தை தான் பார்த்தோம்.

மதுரை வேளாண் கல்லூரி போராசியர் சாமிநாதன், ஆராய்ச்சி மாணவர் அன்பரசு

கரோனாவால் மாசு குறைந்து கரும்படலம் இல்லாத தெளிவான வானம் தெரிகிறது. வாகன ஓட்டம் குறைந்ததால் புகை மண்டலம் இல்லை. தொழிற்சாலை கழிவுகள் கலப்பது நின்றதால் நதிகளில் நீர் நன்னீராக செல்கிறது.

வண்டிகளின் கூச்சலுடன் விடிந்த காலைப்பொழுது அது இல்லாமல் குருவிகளின் இனிமையான கூக்குரலுடன் விடிகிறது. பொது வெளிகள் சுத்தமாக இருக்கின்றன. கண்ட இடத்தில் கண்டதை செய்யும் நிலையில் இருந்தவர்கள் இப்போது தன் சுத்தம், பொது சுத்தம் உணர்ந்து செயல்படுகின்றனர். பொது வெளியில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது, தேவையற்றதை எரிப்பது என்றிருந்தவர்களை கரோனா மாற்றியுள்ளது.

அத்தியாவசியம் எது, அநாவசியம் எது எனத் தெரியாமல் ஆடம்பரம் ஒன்றே சந்தோசம் என்றிருந்த பிம்பத்தை கரோனா உடைத்து நொறுக்கியுள்ளது. வருமானம் குறைவாக இருந்தாலும் வசதிகள் அதிகம் இருப்பதால் அனுபவிக்க தெரிந்திருந்தவர்களை வசதிகள் குறைந்தாலும் வாழலாம் என்பதை கரோனா உணர்த்தியுள்ளது.

ஆடம்பரத் திருமண முறை ஒழிந்து, ஆதிதமிழன் முறைப்படி வீட்டில் திருமணம், வீட்டு சமையலே அறுசுவை உணவு, பசித்த பின்பே புசிப்பது, குடும்பத்தில் அன்பு, பாசத்தை அதிகரிக்கச் செய்தது, சாதாரண தலைவலி, சளி, காய்ச்சலுக்கு மருத்துவமனைக்கு ஓடாமல் பாட்டி வைத்தியத்தை பின்பற்றுவது, பிறருக்கு உதவும் குணத்தை ஏற்படுத்தியது, பிராணிகளையும் சக மனிதர்கள் போல் பாவித்து உணவளிப்பது என கரோனாவால் நிகழ்ந்த பலன்கள் ஏராளம்.

பாதை தேடியவர்களை விட போதை தேடியவர்களே அதிகம் என்றிருந்த உலகில், போதை இல்லாமலும் வாழ முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. வருமானத்தில் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும், அத்தியவாசியத்தை விட அதிகம் செலவழிக்கக்கூடாது என்பதையும் மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

இப்படி கரோனா கற்றுத்தந்த ஏராளமான படிப்பினைகளை கரோனா இல்லாத காலத்திலும் முன்னெடுத்துச் சென்றால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x