Published : 28 Apr 2020 05:37 PM
Last Updated : 28 Apr 2020 05:37 PM
விருதுநகர், பள்ளபட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் படித்து வரும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அங்கு பணியாற்றி வரும் ஆசிரியர்களே உதவியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி கல்வி மாவட்டம், பள்ளபட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பட்டாசுத் தொழிற்சாலையில்
பணிபுரியும் பெற்றோர்களின் குழந்தைகளே அதிகம் படிக்கின்றனர். கரோனா நோய்ப் பரவல் காரணமாக பட்டாசுத் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதனால், பெற்றோர்கள் வாழ்வாதாரத்தினை இழந்து சிரமப்படுகின்றனர். இதை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவிட எண்ணினர். எனவே, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தீர்மானித்தனர்.
ஒவ்வொரு மாணவரின் பெற்றோரையும் தனித்தனியாக அழைத்து 5 கிலோ அரிசி, உளுந்து, கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம், டீத்தூள்
மற்றும் மசாலாப் பொருட்களை வழங்கினர். இதனால் பள்ளியில் 125 மாணவர்களின் பெற்றோர்கள் பயனடைந்தனர்.
ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை வழங்கி, காலத்தே உதவி செய்த பள்ளித் தலைமை ஆசிரியை அமுதா, ஆசிரியர்கள் சாந்தி, கோமா, வீரலட்சுமி, அமுதா மற்றும் சங்கரலிங்கம் ஆகியோரை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மனதார வாழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT