Published : 28 Apr 2020 02:13 PM
Last Updated : 28 Apr 2020 02:13 PM

கரோனாவால் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்!

இந்தச் செய்தியை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது உலகின் 185 நாடுகளில் பரவியிருக்கும் கரோனா, தனது ஆக்டோபஸ் கரங்களை விரித்துப் பரப்பி வருவதில் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்திருக்கும். மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 7 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.

கரோனாவால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் அமெரிக்காவில் 9.5 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகி, 54 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். நியூயார்க்கில் மட்டுமே 17 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். உலக அளவிலான கரோனா இறப்புகளில் 10 முதல் 19 வயது வரையிலான சிறார்களின் இறப்பு விகிதம் 01.12% என்ற அளவில் குறைவாக இருந்தாலும் இதையும் கவலையுடன் சுட்டிக்காட்டியிருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

அதேநேரம் கரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் நாடுகள் கடைப்பிடித்துவரும் ஊரடங்கு நிலைமை காரணமாக குழந்தைகள் தற்போது புதிய சவாலை எதிர்கொண்டுள்ளனர். இதுபற்றி தெரிவித்திருக்கும் ஐ.நா. குழந்தைகள் நலனுக்கான அமைப்பான யுனிசெஃப், ‘பல நோய்களைத் தடுக்கும் விதமாகக் குழந்தைகளுக்கும் சிறார்களுக்கும் தரவேண்டிய தடுப்பூசிகளை உரிய காலத்தில் போடவேண்டிய மருத்துவமனைகளும் கிளினிக்குகளும் செயல்பட முடியவில்லை.

மருத்துவமனைகள் கரோனா சிகிச்சையில் முழு கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. அதேபோல் பல வளரும் நாடுகள் தொடர்ந்து மேற்கொண்டுவரும் தடுப்பூசி முகாம்களையும் நடத்த முடியவில்லை. இதனால், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகளுக்குத் தட்டம்மை, டிப்திரீயா, போலியோ போன்ற நோய்களுக்கு எதிராகத் தடுப்பூசிகள் மற்றும் சொட்டு மருந்து போடும் முக்கிய சுகாதாரப் பணி முடங்கியுள்ளது. சுமார் 25 நாடுகள் தட்டம்மை தடுப்பூசி முகாம்களைத் தற்போது தள்ளி வைத்துள்ளன. இதனால் கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு இந்த நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

யுனிசெஃப் அமைப்பின் குழந்தைகளுக்கான தடுப்பூசிப் பிரிவின் தலைமை ஆலோசகரான ராபின் நண்டி இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, “கரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வந்தாலும் குழந்தைகளுக்குத் தடுப்பூசி வழங்கி, உயிர் காக்கும் பணி மிக முக்கியமானது. இல்லாவிட்டால் பல கோடி இளம் உயிர்களுக்கு நாம் ஆபத்தை ஏற்படுத்தி விடுவோம்.

ராபின் நண்டி

இந்தக் கரோனா பேரிடர் தொடங்கிய பிறகு ஒரு வயதுக்கு உட்பட்ட 2 கோடி குழந்தைகள் போலியோ மற்றும் தட்டம்மை போன்றவற்றுக்கான தடுப்பு மருந்தைப் பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர். கரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்கும் வரை இந்தத் தடுப்பூசிகள் போடப்படுவது தள்ளிப்போகும். இந்த அபாயத்தை நாம் தவிர்த்தே ஆகவேண்டும்” எனக் கவலையுடன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x