Last Updated : 27 Apr, 2020 05:34 PM

1  

Published : 27 Apr 2020 05:34 PM
Last Updated : 27 Apr 2020 05:34 PM

கரோனா: வானொலியில் பாடம் நடத்தும் உத்தி கைகொடுக்குமா?

கரோனா பரவல் ஏற்படுத்தி இருக்கும் பல கவலைகளில் ஒன்று மாணவர்களுக்கு எப்படி கல்வியைக் கொண்டு சேர்ப்பது என்பதாகும். வசதி படைத்த பள்ளிகள் ஜூம் ஆப் உள்ளிட்ட டிஜிட்டல் தொழில்நுட்ப வழிகள் மூலம் வீடடங்கி இருக்கும் குழந்தைகளுக்குப் பாடம் நடத்தி வருகின்றன. மறுபுறம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்நோக்கி இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வழியாகவும் யூடியூப் வழியாகவும் திருப்புதல் நடத்தப்பட்டு வருகிறது.

இருக்கப்பட்டவர்களுக்குத்தான் இந்த இரண்டு முயற்சிகளுமே பயனளித்து வருகின்றன. அதுகூட ஓரளவுக்குத்தான். டிஜிட்டல் வழி கற்பித்தல் முறை இதுவரை இந்தியாவில் மிகச் சொற்பமானவர்களையே சென்றடைந்து கொண்டிருக்கிறது. அலைபேசியோ, கணினியோ, தொலைக்காட்சிப் பெட்டியோ இன்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு எட்டாக் கனியே. அப்படி இருக்க அம்மக்களின் சந்ததியினருக்கு இத்தகைய சாதனங்கள் வழியாகக் கல்வி கற்பிக்க முனைவது என்பது வெறும் கையில் முழம் போடும் செயலாகவே இருக்கும்.

இவை அல்லாது இன்று 99 சதவீதம் இந்திய மக்களை அனுதினம் சென்றடையும் ஒரு தகவல் சேவை இருக்கவே செய்கிறது. அதுதான் வானொலி. அனைத்திந்திய வானொலி சேவை ஒலிக்காத இந்திய குக்கிராமம் அரிது. பண்பலை வானொலி சேவையானதோ 65 சதவீத இந்திய மக்கள்தொகையைச் சென்றடைவதாக இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பின் 2018-ம் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது. ஆகவே கரோனா ஊரடங்கு காலத்தில் கல்வியைப் பரவலாக்க வானொலி சாதனம் கைகொடுக்கும்.

இதைச் சரியான நேரத்தில் உணர்ந்த காஷ்மீர் பள்ளிக் கல்வித்துறை அகில இந்திய வானொலி நிலையத்துடன் இணைந்து இன்னும் சில தினங்களில் வானொலி வழியாக பள்ளி மாணவர்களுக்குக் கல்வி அளிக்கவிருக்கிறது. இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே ஒலிவழிப் பள்ளிப் பாடங்களை மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதே திட்டத்தை தமிழகத்திலும் அமல்படுத்தலாமா என்ற கேள்வியோடு கல்வியாளர்களை அழைத்துப் பேசினோம்.

ஒலிச் சித்திரப் பாடம் நடத்தலாம்!
ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வரும் கல்விச் செயற்பாட்டாளருமான பேராசிரியர் இரா.முரளி கூறும்போது, "என்னைப் பொறுத்தவரை ஆன்லைனிலோ அல்லது வானொலியோ எந்த வழியாகப் பாடம் நடத்துவதானாலும் பாடம் நடத்தப்படும் முறை மாணவர்களுக்கு சுவாரசியமாக இருக்க வேண்டும். கற்பனைத் திறன் உள்ள ஆசிரியர்கள் இதில் ஈடுபட வேண்டும். ஆனால், தற்போது தனியார் பள்ளிகள் கடைப்பிடித்து வரும் ஆன்லைன் வகுப்புகள் முறையில் காட்சி ஊடகம் குறித்த எத்தகைய புரிதலும் இல்லாமல் வளவளவென ஒரே இடத்தில் நின்றுகொண்டு ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இது மாணவர்களை மேலும் சோர்வடையவே செய்கிறது. அதேநேரத்தில் வானொலி என்பது வசதியற்ற குழந்தைகளைக் கல்வி சென்றடைய நல்ல வழிதான். இந்த ஊடகத்தின் பலத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். தென்கச்சி கோ.சுவாமிநாதனின் கதை சொல்லும் பாங்கே உதாரணம். 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியில் அவ்வளவு இனிமையாக, எளிமையாக அவர் சொல்லவந்த கருத்தை முன்வைப்பார். அப்படியே ஆளைக் கட்டிப்போட்டு விடுவார்.

இதுபோன்று நம்முடைய ஆசிரியர்களாலும் நிச்சயமாகச் செய்ய முடியும். அதற்கு சிறப்புப் பயிற்சி எதுவும் தேவையில்லை. புரிதல் இருந்தாலே போதுமானது. உதாரணத்துக்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் அகில இந்திய வானொலி நிலையமும் இணைந்து தினந்தோறும் இரவு 10.30 - 11 மணிவரை நிகழ்ச்சி நடத்துவார்கள். அதில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக வானொலி பாடம் நடத்தி இருக்கிறேன். வெறுமனே விரிவுரையாக அல்லாமல் நாடகம் போல பாடத்துக்கு வடிவம் கொடுத்துப் பேசுவோம். அதுவும் ஒற்றைக் குரலாக ஒலிக்கச் செய்யாமல் நான்கு, ஐந்து பேருடன் உரையாடல் வடிவில் பாட வகுப்பை மாற்றுவோம். இதேபோலச் செய்யலாம்.

கணிதம், அறிவியல் பாடங்களை வானொலி வழியாக எடுப்பது சிரமம். ஆனாலும் இதை முயற்சிக்கலாம். குறிப்பாக 1-ம் வகுப்பில் இருந்து 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மொழி பாடங்கள், சமூக அறிவியல் ஆகியவற்றைச் சிறப்பாக சொல்லித் தரலாம். வெறுமனே ஆசிரியர்கள் மட்டும் பாடம் எடுக்காமல் ஆர்.ஜே.க்களோடு இணைந்து நிகழ்ச்சியைத் தயாரிக்கலாம். ஏதோ கரோனா காலத்துக்கான மாற்று ஏற்பாடாக மட்டுமல்லாமல் கற்பித்தல் முறையில் புதிய மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான திட்டமாகவும் இதை முன்னெடுக்கலாம்" என்றார்

சாமானிய மக்களுக்கு உதவும்
கல்வியாளர் பா.ரவி கூறும்போது, "இத்தனை நாட்களாக பள்ளி, கல்லூரி வளாகத்துக்குள் அலைபேசி எடுத்துவந்தால் மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று சொன்ன கல்வி நிறுவனங்கள் இப்போது திடீரென அலைபேசி வழியாக மாணவர்களைப் பாடம் படிக்கச் சொல்கின்றன. ஆகையால் ஆசிரியர்களாலும் அதன் வழியாகத் திறம்பட பாடம் நடத்த முடியவில்லை. மாணவர்களும் திணறுகிறார்கள். அதை விட்டுவிடுவோம். ஏனென்றால் இன்றைய சூழலுக்கு அது ஓரளவேனும் கைகொடுக்கிறது.

அதே நேரத்தில் வானொலி என்பது மக்களின் ஊடகம். ஒருகாலத்தில் வெகுஜன மக்களைச் சென்றடையும் ஊடகமாக அதுவே இருந்தது. ஐந்து நாள் கிரிக்கெட் டெஸ்ட் மேட்சைக்கூட வானொலியிலேயே கேட்ட காலம் உண்டு. இன்றும் சாமானிய மக்களுக்கு வானொலி கேட்கும் வழக்கம் இருந்து வருகிறது. ஆகையால் அதன் மூலம் பள்ளிப் பாடங்களைக் கற்பித்தலை சோதனை முயற்சியாகச் செய்து பார்க்கலாம்" என்றார் ரவி.

மாணவர்களை ஈர்க்கும்
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்தவரும் பள்ளித் தலைமையாசிரியருமான முனைவர் என்.மாதவன் கூறுகையில், "கரும்பலகை மற்றும் சாக் என்ற ஜோடிக்கு மாற்றாக எதைக் கொண்டு வந்தாலும் நான் வரவேற்பேன். ஏனென்றால் வகுப்பறையின் வழக்கமான பாடம் கற்பிக்கும் முறையில் இருந்து விலகி கல்வியை உயிர்ப்பிக்கும் முயற்சிகள் இவை. சொல்லப்போனால் அலைபேசியில் வீடியோ பார்ப்பதைவிட வானொலியில் ஒலி வழிப் பாடம் கேட்பது நல்லது.

காட்சி வழி கவனச் சிதறலை ஏற்படுத்தும். ஆனால், ஒலி வடிவில் மட்டுமே இருக்கும்போது உன்னிப்பாகக் கவனிப்பார்கள். இத்தகைய முயற்சிகள் மாணவர்களைக் கட்டாயம் ஈர்க்கும். அதேநேரத்தில் இன்று வானொலி என்பது வழக்கொழிந்து போய்விட்டதோ என தோன்றுகிறது. நானே பலமுறை தனியார் பண்பலையில் பேசி வருகிறேன். ஆனால் ஒரு முறைகூட கேட்டதில்லை. இந்நிலையில் அரசு இந்த ஊடகத்தைப் பலப்படுத்த வேண்டும். மக்களைச் சென்றடையும் வழிவகை செய்ய வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x