Published : 25 Apr 2020 05:20 PM
Last Updated : 25 Apr 2020 05:20 PM

தினக்கூலிப் பணியாளர்களுக்கு தினந்தோறும் ஒருவேளை உணவு: ஆசிரியர் பார்வதியின் மனிதநேயம்

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலிப் பணியாளர்களின் பசியாற்றி வருகிறார் சேலத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் பார்வதி.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தினக்கூலிப் பணியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம், கந்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியரான பார்வதி இவர்களின் பசியாற்ற முடிவெடுத்தார். அதற்காக ஏப்ரல் 13-ம் தேதி முதல் கரோனா வைரஸ் நிவாரணப் பணிகளில் தன்னார்வலராக ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்துப் பேசும் அவர், ''ஆரம்பத்தில் சேலம் திருவாக்கவுண்டனூர், ஜங்சன், கந்தம்பட்டி பகுதிகளில் உள்ள வீடற்ற 50 நபர்களுக்கு எனது சொந்த செலவில் மகளுடன் இணைந்து ஒருவேளை உணவு வழங்கி வந்தேன்

தற்பொழுது நண்பர்களின் உதவியுடன் 120 வீடற்ற, சாலையோர நபர்களுக்கு ஒருவேளை உணவு வழங்கி வருகிறேன். மதிய உணவு பெரும்பாலும் தன்னார்வலர்கள் மூலம் இவர்களுக்குக் கிடைத்து விடுகிறது. இதனால் அனைவருக்கும் இரவு உணவு வழங்குகிறோம்.

அத்துடன் ஓட்டல் பணியாளர்கள், தினக்கூலிகள், கட்டிட வேலை செய்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், வேலையிழந்தோர், பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த நாடோடிகள் என இதுவரை 70 குடும்பங்களுக்கு தலா 1,400 ரூபாய் மதிப்பில் அரிசி, மளிகைப்பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றையும் வழங்கியுள்ளேன்.

நண்பர்கள் உதவியால்தான் இவை அனைத்தும் சாத்தியமானது. கரோனா காலம், மனிதர்களிடத்தே உள்ள பெருங்கருணையை வெளிக்காட்டுகிறது. அதேநேரத்தில் உதவிகள் செய்வோர் உதவி பெறும் நபர்களின் புகைப்படங்களை எடுத்து, அவற்றைத் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்வதைத் தவிர்க்கலாம்'' என்றார் ஆசிரியர் பார்வதி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x