Last Updated : 24 Apr, 2020 04:26 PM

 

Published : 24 Apr 2020 04:26 PM
Last Updated : 24 Apr 2020 04:26 PM

தனித்திருந்து வீழ்த்துவோம்: குமரியில் கரோனா குறும்படம் எடுத்த பள்ளி மாணவர்கள்- காவல்துறை பாராட்டு

நாகர்கோவில்

குமரியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், தனித்திருந்து கரோனாவை வீழ்த்துவோம் என்ற கருத்துடன் குறும்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தமிழ், மலையாள மொழிகளில் எடுக்கப்பட்ட குறும்படம் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறும்படம் எடுத்த மாணவர்களை காவல்துறையினர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

கரோனாவை ஒழிக்க அரசு தரப்பில் விழிப்புணர்வுகள் பல ஏற்படுத்தப்பட்டுள்ள தருணம் இது. இந்நேரத்தில் பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து எடுக்கப்பட்ட குறும்படம் அனைத்து தரப்பினரையம் கவர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லைப் பகுதியான படந்தாலுமூடு மீனச்சலை சேர்ந்தவர் சஜ்ய குமார். இவரது மகன் நிரஞ்சன்(17) 11-ம் வகுப்பு மாணவர். இவர் ஏற்கெனவே சக மாணவர்களுடன் இணைந்து கடந்த 6 மாதத்திற்கு முன்பு எடுத்த ஹெல்மெட், மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த குறும்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. போலீஸார், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது கரோனா பாதிப்பால் மக்கள் அவதி அடைவதையும், அதிலிருந்து மீள்வதற்கு சிறுவர்கள், இளைய தலைமுறையினர் தனித்திருப்பதும், அதன் அவசியத்தை சக நண்பர்கள், உறவினர்களிடம் பகிர்ந்து கொள்வது குறித்தும் இரணடரை நிமிடம் மட்டுமே ஓடும் குறும்படம் ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ், மற்றும் மலையாளத்தில் தனித்தனியாக 2.40 நிமிடங்கள் ஓடும் இந்த விழிப்புணர்வு குறும்படம் யூ டியூப், மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தனித்திருந்து கரோனாவை ஒழிப்பதை மையக்கருத்தாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தக் குறும்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதைப் பார்த்த காவல்துறையினர் கரோனா விழிப்புணர்வு குறித்த மாணவர் நிரஞ்சனின் குறும்படத்தை வெகுவாக பாராட்டினர். அத்துடன் இந்த குறும்படத்தை காவல்துறையினர் சொல்லும் விழிப்புணர்வு வீடியோவாகவும் அங்கீகரித்துள்ளனர். இதனால் மாணவர் நிரஞ்சன் தலைமையிலான மாணவர் குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து மாணவர் நிரஞ்சன் கூறுகையில்; நானும் எனது நண்பர்கள் கிரிதர், ஹரிதா, நந்தனா, ஸ்ரீகாந்த், தீரஜ் ஆகியோரும் சேர்ந்து சமுதாயத்திற்கு பலனுள்ள கருத்துக்களுடன் கூடிய கதை எழுதி நடித்து பல குறும்படங்களை தயாரித்துள்ளோம். இவற்றை இணையதளங்கள் மூலம் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

தற்போது கரோனா விழிப்புணர்வு குறித்த குறும்படத்தை பார்த்த குமரி மாவட்ட காவல்துறையினர் அவர்களின் அதிகாரப்பூர்வ விங்க், மற்றும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகினறர்.

காவல்துறையினர் எங்களைப் பாராட்டியது மகிழ்ச்சி ஏற்படுத்தியுளது. தற்போது இந்த குறும்படம் காவல்துறை சார்பில் நடத்தப்படும் கரோனா விழிப்புணர்வு போட்டியிலும் பங்கேற்கவுள்ளது. கரோனா குறித்து மலையாளத்தில் வெளியிட்டுள்ள குறும்படம் தற்போது டிரண்டிங் ஆகி வருகிறது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x