Published : 23 Apr 2020 01:53 PM
Last Updated : 23 Apr 2020 01:53 PM
தமிழக பள்ளிக் கல்வித் துறை முதல் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் வடிவமைத்துள்ள கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விருதுநகர் மாவட்டத்தில் கேபிள் டி.வி. மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ம.க.செ.சுபாஷினி தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் கேபிள் டி.வி. மூலம் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கி வைத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ம.க.செ.சுபாஷினி, “தமிழக பள்ளிக் கல்வித் துறையின் "கல்வி தொலைக்காட்சி" மாணவர்களின் கற்றல் திறன்களை மேம்படுத்தும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்காக ஒவ்வொரு பாட வாரியாக திருப்புதல் மற்றும் வினாக்கள் மாதிரி வடிவமைப்பு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.
கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அரசு கேபிள் மற்றும் டி.சி.சி.எல். இணைப்பில் 200-ம் எண்ணிலும், எஸ்.சி.வி. இணைப்பில் 98, அக்ஷயா இணைப்பில் 55 மற்றும் வி.கே.டிஜிட்டல் இணைப்பில் 100 ஆகிய எண்களில் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் டி.டி.பொதிகை யில் தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரையும், பாலிமர் சகானாவில் காலை 11 மணி முதல் 12 மணி வரையும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களில் திருப்புதல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனை பல லட்சம் மாணவர்கள் கண்டு தங்களை பொதுத் தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் பல கிராமப் பகுதிகளுக்கு கேபிள் இணைப்பு மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தேர்வுக்கு ஆயத்தமாகும் மாணவர்கள் யாரும் இந் நிகழ்ச்சியை பார்ப்பதிலிருந்து விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக கேபிள் இணைப்பு மூலமும் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பதற்கு விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ஸ்ரீவி. கம்யூனிகேஷன் டிஜிட்டல் மூலம் டவர் தொலைக்காட்சியில் 51 வது சேனலில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு புதன்கிழமை இரவு முதல் ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கூடுதலாக மாவட்டத்தில் சுமார் 11 ஆயிரம் இணைப்புகளில் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தெரியும்.
10 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ மாணவியர் இந்த நிகழ்ச்சிகளைக் கண்டு, தொடர்ந்து பாடங்களுடன் தொடர்பில் இருந்து, தேர்வுகளை எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும்'' என அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT