Published : 20 Apr 2020 07:44 AM
Last Updated : 20 Apr 2020 07:44 AM
பள்ளிகளின் நிலுவை கல்விக் கட்டண வசூல் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதிய விவகாரங்களில் அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) செயலர் அனுராக் திரிபாதி, அனைத்து மாநிலங்களின் பள்ளிக்கல்வி இயக்குநரகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
கரோனா வைரஸ் பரவலால் ஊரடங்குஅமலில் உள்ளதால் சிபிஎஸ்இ பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே நிலுவையில் உள்ள கல்விக் கட்டணத்தை செலுத்த சிபிஎஸ்இ பள்ளிகள் வற்புறுத்துவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும்,தற்போதைய பொருளாதார நெருக்கடியில் கட்டணத்தை செலுத்த அவகாசம் வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல், பள்ளி நிர்வாகங்கள் கடந்த மாத ஊதியத்தை இன்னும்வழங்கவில்லை எனவும் ஆசிரியர்கள் தரப்பிலும் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த சிக்கல்களை தவிர்க்க அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பள்ளிக்கல்வித் துறை தலைவர் உட்பட்ட அதிகாரிகள் கல்விக் கட்டணத்தை முடிவு செய்ய சிபிஎஸ்இ சட்ட விதிகளில் இடமுள்ளது.
தற்போதைய அசாதாரண சூழலில் சிபிஎஸ்இ பள்ளிகள் நிதி நெருக்கடி உட்பட பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. மறுபுறம் பெற்றோர்கள் நிலையும் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
எனவே, பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம், ஆசிரியர்களுக்கு நிலுவை ஊதியம் ஆகிய விவகாரங்களில் நல்லமுடிவை மாநில அரசுகளே எடுக்க வேண்டும். பெற்றோர்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு கல்விக் கட்டணங்களை தவணை முறையில் செலுத்தவும், ஆசிரியர்களுக்கான ஊதியம் கிடைக்கவும் தேவையான அறிவுறுத்தல்களை பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT