Published : 16 Apr 2020 02:27 PM
Last Updated : 16 Apr 2020 02:27 PM

கரோனா வைரஸ் விழிப்புணர்வுப் பாடல்: ஓசூர் அரசுப் பள்ளி ஆசிரியைக்கு குவியும் பாராட்டு

ஓசூர்

கரோனா வைரஸ் விழிப்புணர்வுப் பாடல் ஒன்றை எழுதிய ஓசூர் அரசுப் பள்ளி ஆசிரியைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஓசூர் பஸ்தி குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர் ஆசிரியை ராஜலட்சுமி. இவர் ஓசூர் புனுகன்தொட்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வீட்டில் இருந்து வருகிறார் ஆசிரியை ராஜலட்சுமி. அதே நேரத்தில் அரசு அறிவித்துள்ள ஊரடங்குக்கு மதிப்பளித்து வீடுகளில் இருக்குமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கணவர் வரதராஜ் , மகள் மீனாட்சி பார்வதி மற்றும் குடும்பத்தாருடன் இணைந்து கரோனா விழிப்புணர்வுப் பாடலை இயற்றிப் பாடியுள்ளார்.

மறைந்த பிரபல நடிகர் சந்திரபாபு பாடிய குங்குமப்பூவே ... எனத் தொடங்கும் பிரபலமான சினிமா பாடலின் இசைக்கேற்ப பாடல் வரிகள் எழுதிப் பாடப்பட்டுள்ளன. இந்த கரோனா வைரஸ் விழிப்புணர்வுப் பாடல் வாட்ஸ் அப் மூலமாக ஓசூர் மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.

''எங்கும் கொரோனா
வைரஸ் தானா...
சைனால பொறந்து
உலகம் பூரா பரவுது தானா...'' என்று தொடங்கி பாடல் நீள்கிறது.

இதுகுறித்து ஆசிரியை ராஜலட்சுமி கூறியதாவது:
''புனுகன்தொட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். ஊரடங்கு சமயத்தில் பொதுமக்கள் வெளியில் வராமல் வீட்டில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாடல் எழுதிப் பாடப்பட்டுள்ளது. மக்களிடம் விரைவில் சென்றடையும் நோக்கத்தில் பிரபல சினிமா பாடல் மெட்டில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதியுள்ளேன். குடும்பத்தாருடன் சேர்ந்து மகள் பாடியிருக்கிறார். மக்கள் ஊரடங்கைப் பின்பற்றி, வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.''

இவ்வாறு ஆசிரியை ராஜலட்சுமி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x