Last Updated : 15 Apr, 2020 09:40 PM

 

Published : 15 Apr 2020 09:40 PM
Last Updated : 15 Apr 2020 09:40 PM

ஆன்லைன் மூலம் கரோனா வைரஸ் தடுப்புப் பிரச்சாரம்: காமராசர் பல்கலையில் 50 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி

கரோனா விழிப்புணர்வுக்கான ஆன்லைன் பயிற்சி தொடக்கவிழாவில் பங்கேற்ற கரோனா தடுப்பு பொறுப்பு அதிகாரி காமராஜ், மாநகராட்சி ஆணையர் விசாகன், துணைவேந்தர் கிருஷ்ணன், செல்லமுத்து அறக்கட்டளை இயக்குநர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர்.

கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள காமராசர் பல்கலைக்கழகம், பெங்களூரு தேசிய மனநல மற்றும் நரம்பு அறிவியல் நிறுவனம், மதுரை எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை, ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நாட்டு நலப்பணி மாணவர்கள், திட்ட அலுவலர்களுக்கான 3 நாள் ஆன்லைன் பயிற்சியை இன்று தொடங்கியது.

கரோனா தடுப்பு பொறுப்பு அதிகாரி காமராஜ் சி.காமராஜ் பேசுகையில், ''எத்தனையோ உயிர் போக்கும் நோய்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. கரோனா 200 நாடுகளுக்கும் மேல் பரவி பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. பயம் நீங்கினால்தான் மன திடம் வரும். அதற்கு மாணவர்கள் பணிபுரியவேண்டும். சமுதாயப் பங்களிப்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் போன்று மாணவர்களும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்'' என்றார்.

காமராசர் பல்கலை. துணைவேந்தர் மு.கிருஷ்ணன் பயிற்சி நோக்கம் குறித்துப் பேசும்போது, ''இந்தப் பயிற்சி 3 நாட்களுக்கு தினமும் 3 மணிநேரம் வீதம் 9 மணிநேரம் நடக்கிறது. பல்கலை. பேராசிரியர்கள், அலுவலர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். கரோனா அடிப்படைத் தகவல் - அறிகுறிகள், தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றைத் தெளிவாகத் தெரிந்துகொள்வது, தெரிந்த தகவல்களை மொபைல், ஆன்லைன் வழியே பொதுமக்களிடம் எடுத்துச் செல்லுதல் ஆகியவற்றின் மூலம் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு இச்சேவை விரிவுபடுத்தப்படும்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு செல்லமுத்து அறக்கட்டளையிலுள்ள அனுபவமிக்க மனநல மருத்துவர்களால் ஆன்லைன் மூலம் உதவிகள் செய்வதற்கு வழிவகுத்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர். இப்பயிற்சியைப் பெற விரும்புவோர் பல்கலை என்எஸ்எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமாரைத் (94891 77680) தொடர்பு கொள்ளலாம்'' என்றார்.

ஜூம் செயலி வழியாக இப்பயிற்சி நடந்தது. மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன், கரோனா தடுப்பு பொறுப்பு அதிகாரி சி.காமராஜ் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். செல்லமுத்து அறக்கட்டளை இயக்குநர் சி.ராமசுப்பிரமணியன், மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்குமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x