Last Updated : 15 Apr, 2020 04:18 PM

 

Published : 15 Apr 2020 04:18 PM
Last Updated : 15 Apr 2020 04:18 PM

இணைய வழியில் பாடம் கற்கும் கோவை அரசுக் கல்லூரி மாணவர்கள்: புதிய அனுபவம் பெற்றதாக நெகிழ்ச்சி

கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இணையதளத்தின் வழியாகப் பாடம் கற்று வருவதால், புதிய அனுபவத்தைப் பெற்றுள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

கோவை அரசு கலைக் கல்லூரி ரேஸ் கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு வருகிறது. தன்னாட்சி அந்தஸ்து பெற்ற இக்கல்லூரியில் 20 இளநிலை பட்டப் படிப்புகளும், 21 முதுநிலை பட்டப்படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இத்துடன் எம்.ஃபில்., பிஎச்.டி. படிப்புகள் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 5,500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இக்கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி முதல் கட்ட ஊரடங்கு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை இரண்டாம் கட்ட ஊடரங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதையொட்டி மாணவர்கள் அதிக அளவில் கூடும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்காமல் இருக்கும் வகையில் உயர்கல்வி நிறுவனங்கள் இணையதளக் கற்றலுக்கு மாறியுள்ளன. இதன்படி கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் கே.சித்ரா அறிவுறுத்தலின் படி, இணையதள வகுப்புகள் தொடங்கப்பட்டு, மாணவர்கள் உற்சாகமாகப் பாடம் படித்து வருகின்றனர்.

இது குறித்து இணையதளக் கற்றல் வகுப்பைத் தொடங்கி நடத்தி வரும், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மோ.செந்தில்குமார் கூறியதாவது:

''செமஸ்டர் தேர்வுக்கான பாடப்பகுதிகள் பெரும்பாலும் முடிக்கப்பட்ட தருவாயில் கரோனா வைரஸ் பரவல் இடையூறு காரணமாக ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கற்றல், கற்பித்தல் பாதிப்படையாமல் இருக்கும் வகையில், முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களை ஒருங்கிணைத்து, 'Zoom' செயலியின் உதவியுடன் வகுப்புகள் நடத்தி வருகிறேன். இதன்மூலம் ஒரே நேரத்தில் 100 பேர் வரை இணைக்க முடியும்.

இணையதள வசதி இருந்தால் போதும். 40 நிமிடங்கள் வரை வகுப்பு நடத்தலாம். அதன்பிறகு இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும். மீண்டும் இணைத்து கூடுதலாக 40 நிமிடங்கள் வகுப்பு நடத்தி, மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பது, கலந்துரையாடுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறேன். மாணவர்கள் ஆர்வமுடன் பாடம் கற்று வருகின்றனர்''.

இவ்வாறு செந்தில்குமார் கூறினார்.

அரசு கலைக் கல்லூரியில் அதிக அளவில் ஏழை மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இதுபோன்ற ஸ்மார்ட்போன் மூலமாக மாணவர்களை இணைப்பது எவ்வாறு சாத்தியமானது என்று கேட்டபோது, ''இன்றைய சூழலில் வீட்டில் ஒருவராவது ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். தொடக்கத்தில் இணையதளக் கற்றல் வகுப்பைத் தொடங்க முற்பட்டபோது, நாங்கள் சந்தித்த சவாலே இதுவாகத்தான் இருந்தது.

தற்போது ஊடரங்கால் அனைவரும் வீட்டில் இருப்பதால், ஸ்மார்ட்போன் இல்லாத மாணவர்கள் வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள் மற்றும் அருகில் குடியிருப்பவர்களிடம் இதுபற்றி தெரிவித்து, அவர்களின் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்த அறிவுறுத்தினோம்.

மாணவர்களும் ஆர்வமாக இருந்ததாலும், அவர்களைச் சார்ந்தவர்கள் செல்போனை வழங்கி உதவியதால் இணையதள வகுப்பு சாத்தியமானது. முதலில் இதைப் பயன்படுத்த மாணவர்கள் சிரமப்பட்டனர். அவர்களுக்குத் தெளிவாக விளக்கமளித்து பயன்படுத்தக் கற்றுக் கொடுத்தேன். தற்போது மாணவர்களே அழைத்து நாளை எத்தனை மணிக்கு வகுப்பு? என்று கேட்கின்றனர். நாள்தோறும் மாலையில் அனைவரும் இச்செயலியில் இணைந்து கற்றல் கற்பித்தல் பணிகளைத் தொடர்கிறோம்'' என்றார், முனைவர் மோ.செந்தில்குமார்.

''வகுப்பறையில் மட்டுமே கல்வி கற்று வந்த எங்களுக்கு இணையவழிக் கற்றல் புதிய அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியில், வகுப்பறையில் இருப்பதைப் போன்ற உணர்வை இவ்வகுப்பு எங்களுக்கு அளிக்கிறது. எங்களில் சிலருக்கு ஸ்மார்ட் போன் இல்லை. சாதாரண செல்போன்களே உள்ளன. ஆசிரியரின் அறிவுத்தலின்படி, உறவினர்கள் மற்றும் அருகில் உள்ளவர்களின் ஸ்மார்ட்போன்களை வாங்கிப் படிக்கிறோம். காலத்தை வீணாக்காமல் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், பயனுள்ள வகையில் இவ்வகுப்பு அமைந்துள்ளது'' என்றனர், முதுகலை தமிழிலக்கிய மாணவர்கள்.

இதேபோல் பல்வேறு துறைகளில் இணையதள வகுப்புகள் தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை தொடங்காமல் உள்ள துறைகளில் இணையதள வகுப்புகளைத் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x