Published : 15 Apr 2020 11:03 AM
Last Updated : 15 Apr 2020 11:03 AM

நீட், ஜேஇஇ தேர்வுக்கான விண்ணப்பம்: திருத்த கால அவகாசம் நீட்டிப்பு

நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான விண்ணப்பப் படிவத்தைத் திருத்த மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நீட் எனப்படுகிறது.

இத்தேர்வு வரும் மே மாதம் 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது, எனினும் கரோனா சூழல் காரணமாக தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளின் அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், நீட் மற்றும் ஜேஇஇ முதன்மைத் தேர்வுகளுக்கான விண்ணப்பப் படிவத்தைத் திருத்த மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''ஏராளமான விண்ணப்பதாரர்கள் மற்றும் பெற்றோர் விடுத்த கோரிக்கைகளை அடுத்து, என்டிஏ தலைவருக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

அதன்படி, தேர்வு எழுதுவதற்கான நகரங்கள் தேர்வு உட்பட அனைத்துத் திருத்தங்களையும் மாணவர்கள் மேற்கொள்ள முடியும். இதற்கான கால அவகாசம் மே 3-ம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஜம்மு, காஷ்மீர் மாணவர்களும் இதே தளத்தில் விண்ணப்பப் படிவத்தைச் சரிபார்க்க முடியும். தேர்வர்கள் மிகுந்த கவனத்துடன் தங்களின் தகவல்களைத் திருத்த வேண்டியது அவசியம். இதற்கு மேல் வாய்ப்புகள் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை
தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் ஓஎம்ஆர் முறையில் தேர்வு நடைபெற உள்ளது. மே 3, 2020-ல் மதியம் 2 மணி முதல் 5 மணிவரை 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். கருப்பு பால் பாயிண்ட் பேனா கொண்டு சரியான விடை உள்ள வட்டத்தை நிரப்ப வேண்டும். தென்னிந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் மட்டும் தேர்வு நடைபெறும்.

மதிப்பெண் ஒதுக்கீடு
இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என்ற அடிப்படையில், இரண்டு பாடங்களில் இருந்தும் மொத்தம் 90 கேள்விகளுக்கு 360 மதிப்பெண்கள் வழங்கப்படும். உயிரியல் பாடத்தில் இருந்து கேட்கப்படும் 90 கேள்விகளுக்கு 360 மதிப்பெண்கள். ஆக மொத்தம் 180 கேள்விகளுக்கு 720 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

அதே நேரத்தில் ஒரு கேள்விக்கு ஒரு தவறான விடை அளிக்கும்பட்சத்தில், மொத்த மதிப்பெண்ணில் இருந்து 1 மதிப்பெண் கழிக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x