Last Updated : 13 Apr, 2020 11:19 AM

 

Published : 13 Apr 2020 11:19 AM
Last Updated : 13 Apr 2020 11:19 AM

பொம்மலாட்டம் மூலம் கரோனா விழிப்புணர்வு: ஓய்வு பெற்ற ஆசிரியரின் ஓய்வில்லா முயற்சி

கோவை

பொம்மலாட்டம் மூலம் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரின் இடைவிடாத முயற்சிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள சுப்பிரமணிய பாளையத்தைச் சேர்ந்தவர் மு.சீனிவாசன் (72). ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரும், பொம்மலாட்டக் கலைஞருமான இவர், சமூக வலைதளங்களில் வைரலான கரோனா வைரஸ் விழிப்புணர்வு கானா, டிக் டாக் பாடல்களை பொம்மலாட்டக் கலையின் மூலமாக பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

தென் சென்னையைச் சேர்ந்த கானா பாடகர் சுதாகர் எழுதி பாடிய,
“அந்த சைனாக்காரன் பண்ணி வெச்ச வேல
இப்ப வந்துடுச்சு நமக்கு மரண ஓல
அப்பாவி மக்களும் போறாங்க இறந்து
சீக்கிரம் கண்டு புடிங்கையா மருந்து
தமிழ்நாட்ட தாக்க வருது பாஸ்ட்டா
ஒரு உயிரு கூட போகக்கூடாது வேஸ்ட்டா”
என்ற கரோனா வைரஸ் விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

'South Chennai Music' என்ற யூடியூப் சேனலில் வெளியிட்ட இப்பாடலை 76,13,714 பேர் பார்வையிட்டுள்ளனர். இது தவிர பல்வேறு சமூக வலைதளங்களிலும் இப்பாடல் அதிக அளவில் பகிரப்பட்டு, வைரலாகி வருகிறது.

இதேபோல்,
“கோடி வைரஸிலே எந்த வைரஸ் கொடிய வைரஸ்
கொத்துக் கொத்தாய் கொல்லும் அந்த சீன வைரஸ்
ஓடி வந்தே ஆளையெல்லாம் ஒழிக்கும் வைரஸ்
ஆ...ஆ... கரோனா வைரஸ், கரோனா வைரஸ்”
என்ற பாடலை பலர் டிக் டாக் செய்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.

பிரபலமடைந்த இப்பாடல்களை தன்னுடைய பொம்மலாட்டக் கலையின் மூலமாக மேலும் மெருகேறச் செய்து, 'தனித்திரு, விழித்திரு, வீட்டிலிரு' என்ற விழிப்புணர்வு வாசகங்களையும் பயன்படுத்தி, பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் சமூக ஊடகங்கள் மூலமாக பரவச் செய்து வருகிறார், ஓய்வு பெற்ற ஆசிரியர் மு.சீனிவாசன். இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

“நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி கடந்த 2007-ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். பள்ளியில் பணியாற்றும் போது பள்ளிக் கல்வித்துறையால் செயல்படுத்தப்பட்ட 'கற்றலின் இனிமை' என்ற திட்டத்தில் கருத்தாளராகச் செயல்பட்டேன். ஆடிப் பாடி மாணவர்களுக்குக் கற்பிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மாணவர்களைக் கவர அவர்களுக்குப் பிடிக்கும் வகையில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டபோது, பொம்மலாட்டம் மூலமாக கற்பிக்க முடிவு செய்தேன். அதன் பின்னர் அக்கலையைக் கற்றுக் கொண்டு, பொம்மைகளை உருவாக்கி மாணவர்களின் பாடப்பகுதியில் உள்ள செய்யுள்களை பொம்மலாட்டம் மூலமாகக் கற்பித்தேன். இதற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

ஓய்வு பெற்ற பின்னர் கண் தானம், உடல் உறுப்பு தானம், டெங்கு காய்ச்சல் போன்ற சமூகம் சார்ந்த பிரச்சினைகளை பல்வேறு இடங்களுக்குச் சென்று பொம்மலாட்டம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் இதுகுறித்து பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டமிட்டேன். அப்போது 'அந்த சைனாக்காரன் பண்ணி வச்ச வேல', 'கோடி வைரஸ்களிலே கொடிய வைரஸ் எந்த வைரஸ்' ஆகிய பாடல்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருவதை அறிந்தேன்.

அதன் பின்னர் அந்தப் பாடல்களுக்கு ஏற்றாற்போல் பொம்மைகளை உருவாக்கி, கல்வி அதிகாரிகளின் அனுமதியுடன் கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர், தொண்டாமுத்தூர், மதுக்கரை, சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். பொம்மலாட்டம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியது, மாணவர்களை எளிதாகச் சென்றடைந்தது.

அதன் பின்னர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் என்னால் வெளியில் செல்ல முடியவில்லை. மாற்று வழியை யோசித்தபோது, காணொலிக் காட்சியாக இப்பாடல்களை பொம்மலாட்டம் படமாக்கி ஆசிரியர்களுக்கு அனுப்பி, தங்களின் மாணவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். இதன்படி பலரும் இந்த பொம்மலாட்டக் காட்சியைப் பகிர்ந்து வருகின்றனர்” என்கிறார், ஆசிரியர் மு.சீனிவாசன் பெருமிதத்துடன்.

ஓய்வு பெற்ற பின்னரும் ஓய்வின்றி உழைத்து, தான் கற்ற கலை மூலமாக சமுதாயத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன், கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் பொம்மலாட்டக் கலையை தன்னால் முடிந்த வரை உயிர்ப்புடன் வைத்துள்ளார் ஆசிரியர் மு.சீனிவாசன்.

பொம்மலாட்டக் கலை மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மு.சீனிவாசனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x