Published : 11 Apr 2020 05:26 PM
Last Updated : 11 Apr 2020 05:26 PM
கரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக பாரதப் பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு விளாத்திகுளத்தை சேர்ந்த பள்ளி மாணவர் ரூ.30 ஆயிரம் வழங்கி உள்ளார்.
கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாட்டு மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அரசுகளுக்கு உறுதுணையாகவும் உதவியாகவும் அரசு அதிகாரிகள், பொதுநல அமைப்புகள், தன்னார்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.
கரோனா நிவாரண நிதிக்கு மக்கள் தாராளமாக நிதி அளித்த உதவ வேண்டும் என அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதையடுத்து பிரதமர், முதல்வரின் நிவாரண நிதிக்கு மக்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் தொடங்கி சாதாரண சாமானிய மக்கள் வரை உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இந்நிலையில் விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.சி. பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் எம்.அக்ஷய் தனது கல்வி சுற்றுலாவுக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை வழங்க முடிவு செய்தார்.
அவரது சேமிப்பில் ரூ.30 ஆயிரம் இருந்ததை கணக்கிட்ட அக்ஷய், தலா ரூ.15 ஆயிரத்தை முதல்வர், பிரதமர் நிவாரண நிதிக்கு காசோலையாக மாற்றினார். இதையடுத்து நேற்று விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் வந்த அக்ஷய், வட்டாட்சியர்
ராஜ்குமாரிடம் நிவாரண நிதிக்கான காசோலைகளை வழங்கினார்.
இந்த தேசத்தை சூழ்ந்துள்ள கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்ற ஒவ்வொருவரும் எத்தகைய பங்களிப்பை செலுத்த வேண்டும் என்றும் குறிப்பாக இளைஞர் சமுதாயம் எவ்வளவு தீவிரமாக இயங்க வேண்டும் என்பது குறித்த சிறுவன் அக்ஷய் ஒரு வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நிவாரண நிதி வழங்கிய மாணவர் அக்ஷ்யை ஏராளமானோர் பாராட்டினர். இவர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயனின் மகன் என்பது குறிப்பிடதக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT