

கரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 25 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளைக் கண்டறிந்து அதன் பெயர்ப் பட்டியலை உடனடியாக அனுப்புமாறு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், சார்நிலை அலுவலர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
மேலும், 25 மாணவர்களுக்குக் குறைவான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைச் சேர்ப்பதற்கு, அருகில் உள்ள பள்ளிகளின் விவரம், அப்பள்ளிகள் அமைந்துள்ள தூரம் போன்ற விவரங்களும் அப்படிவத்தில் கோரப்பட்டுள்ளன. இதனால் 25 மாணவர்களுக்குக் குறைவான பள்ளிகள் மூடப்படுமா? அப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பிற பள்ளிகளுக்கு மாற்றப்படுவார்களா? என்ற சந்தேகங்கள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
இது குறித்து ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் பால்ராஜ் கூறும்போது, கல்வித்துறை கேட்கும் இப்புள்ளி விவரமானது ஆசிரியர்கள், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, கல்வித் துறை இதுதொடர்பாக உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும், என்றார்.