Published : 10 Apr 2020 06:09 PM
Last Updated : 10 Apr 2020 06:09 PM
ஊடங்கு அமலில் இருப்பதால் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், முதுநிலை பட்டப்படிப்புகள் இணையவழிக் கற்றலுக்கு மாற்றப்பட்டுள்ளன.
கோவை மருதமலை சாலையில் அமைந்துள்ளது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தில் பொருளியல், விரிவாக்கக் கல்வி, வேளாண் வணிக மேலாண்மை, உழவியல், காலநிலை ஆய்வியல், தாவர உயிரியல், சுற்றுச்சூழல் அறிவியல், மண்ணியல், நுண்ணுயிரியல், நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவித் தகவலியல், மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கவியல், தாவர மரபணுவியல், மூலக்கூறு தாவர இனப்பெருக்கவியல், விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பூச்சியியல், நூற்புழுவியல், தாவர நோயியல், பட்டு வளர்ப்பு, உயிரி தொழில்நுட்பம், புள்ளியியல் ஆகிய 21 படிப்புகளும், 4 தோட்டக்கலை படிப்புகளும், 6 வேளாண் பொறியியல் படிப்புகளும், 2 வனவியல் மற்றும் மனையியல் படிப்புகளும் என 33 முதுநிலை பட்டப்படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இப்படிப்புகளில் 344 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதேபோல் 29 பாடப்பிரிவுகளில் 172 பேர் பி.எச்டி. ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், அதிக அளவில் மாணவர்கள் கூடும் கல்வி நிறுவனங்களுக்கு கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.
இதன்படி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் வேளையில், சில தனியார் கல்வி நிறுவனங்கள் இணையவழிக் கற்றலுக்கு மாறி வருகின்றன. அந்தவகையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இணையவழிக் கற்றலுக்கு மாறியதுடன், குறுகிய காலத்தில் புதிய சாஃப்ட்வேர் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வருகிறது.
இதுகுறித்து அப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.குமார் கூறும்போது, ''கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையில், வேளாண்மைப் பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள், இதுபோன்ற கடினமான காலகட்டத்தைக் கடந்து செல்ல வேண்டியுள்ளன. அதேநேரத்தில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பாதிக்காமல் பார்த்துக் கொள்வது உயர்கல்வி நிறுவனங்களின் கடமையாகும். இதன்படி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இணையவழி கற்றலைத் தொடங்கி, மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி கற்றல், கற்பித்தலைத் தடையின்றி நடத்தி வருகிறது'' என்றார்.
வேளாண்மைப் பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்பு டீன் ஜெ.எஸ்.கென்னடி கூறும்போது, ''மைக்ரோசாஃப்ட் டீம் டீச்சிங் செயலி மூலமாக துறைத்தலைவர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடவேளை அடிப்படையில் ஆசிரியர்கள் இணையவழியில் மாணவர்களுக்குப் பாடம் நடத்துகின்றனர்.
மாணவர்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து இந்தச் செயலி மூலமாக பாடம் கற்கின்றனர். மாணவர்களுக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டு, அதை மின்னஞ்சல் மூலமாகச் சரிபார்த்து அனுப்புகிறோம். இதனால் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பி.எச்டி ஆய்வாளர்கள் கற்றல், கற்பித்தல் தடையின்றி நடைபெறுகிறது. இந்த அசாதாரண சூழ்நிலை சரியானதும், அரசு அனுமதிக்குப் பின்னர் தேர்வுகள் நடைபெறும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT