

அண்ணா பல்கலைக்கழகத்தில் மே மாதம் நடத்தப்பட இருந்த ஆண்டு இறுதி பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக் கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் பரவலை தவிர்க்க நாடு முழுவதும் ஏப். 14-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மார்ச் 16-ம் தேதிமுதல் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ஏப். 14-ம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்றதகவல் பரவியதால், அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவத்தேர்வுகள் நடைபெறுமா என்பது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அண்ணா பல்கலைக்கழகம் தற்போது ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளில் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் ஆண்டு இறுதி பருவத்தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், 2000-ம் ஆண்டுக்குபிறகு பொறியியல் படிப்பைமுடித்து அரியர் தேர்வுகளால் பட்டம் பெற முடியாமல் இருக்கும் மாணவர்களுக்காக ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவிருந்த சிறப்புஅரியர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டதும் மாற்றியமைக்கப்பட்ட பருவத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.