Published : 07 Apr 2020 04:43 PM
Last Updated : 07 Apr 2020 04:43 PM

கரோனா; பிரதமர் நிதிக்கு ரூ.38.91 கோடி வழங்கிய கல்வி நிறுவனங்கள்

கரோனாவை முன்னிட்டு பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ.38.91 கோடிக்கு மேலான தொகையைப் பல்வேறு கல்வி நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

கரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு நிதிச் சிக்கல்களில் தற்போது இந்தியா உள்ளது. இதனைச் சமாளிக்க PM CARES Fund-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு தொழிலதிபர்கள், திரையுலகப் பிரபலங்கள் என நிதியுதவி அளித்தனர். ஏராளமான கல்வி நிறுவனங்களும் பிரதமரின் கணக்குக்குத் தங்களாலான தொகையை அனுப்பி வைத்தன.

இந்நிலையில் பிஎம் கேர்ஸ் நிதிக்கு கல்வி நிறுவனங்கள் இணைந்து ரூ.38.91 கோடிக்கு மேலான தொகையை வழங்கியுள்ளன. நாடு முழுவதும் உள்ள 28 கல்வி நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பல்வேறு துறைகள் ஆகியவை ஒன்றிணைந்து இதை அளித்திருக்கின்றன

குறிப்பாக தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி), சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐஐடி), இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐடி), இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இக்னோ) மற்றும் பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்கள் நிதியுதவி வழங்கின.

அதேபோல பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ), மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ), கேந்திரிய வித்யாலயா சங்கதன் போன்ற ஒழுங்குமுறை அமைப்புகள் (கேவிஎஸ்) மற்றும் என்சிஇஆர்டி ஆகிய கல்வி நிறுவனங்களும் நிதி அளித்தன.

இதுகுறித்துப் பேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ''கோவிட் 19-க்கு எதிராகப் போராட இந்தியாவை வலிமையாக்கி வரும் அனைவருக்கும் நன்றி. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் என்றும் நாட்டுக்கு ஆதரவை அளிக்கும்'' என்று தெரிவித்தார்.

முன்னதாக, அமைச்சர் பொக்ரியால் தனது ஒரு மாத சம்பளத்தையும் எம்.பி. நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயையும் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x