Published : 06 Apr 2020 12:41 PM
Last Updated : 06 Apr 2020 12:41 PM
திருப்பூரில் தினக் கூலி ஊழியரின் 12 வயது மகன், கரோனாவை முன்னிட்டு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.3000 அளித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூரின் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். சாலைகளில் தினந்தோறும் டி-ஷர்ட் விற்பனை செய்துவருகிறார். இவரின் 12 வயது மகன் உபனிஷாந்த், நீச்சல் வீரர். 8-ம் வகுப்பு மாணவரான இவர், மாவட்ட அளவிலான போட்டிகளில் கடந்த 3 ஆண்டுகளாக வெற்றி பெற்று வருகிறார். மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியிலும் முதல் பரிசு பெற்றுள்ளார்.
தான், போட்டிகளில் வெற்றி பெறும் பரிசைக் கொண்டு பள்ளிக் கட்டணம் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார் உபனிஷாந்த். தற்போது கரோனாவால் மக்கள் படும் துன்பத்தைச் செய்திகளில் கண்டவர், அவர்களுக்கு உதவ முடிவு செய்தார்.
சேர்த்து வைத்த பணம் 3 ஆயிரம் ரூபாயை, சிறுவன் உபனிஷாந்த் திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயனிடம் வழங்கினார். அப்பணம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்துச் சொல்பவர், ''தொலைக்காட்சியில் கரோனா செய்திகளைப் பார்த்தேன். வீடில்லாதவர்களும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் எங்களைவிட அதிகம் துன்பப்பட்டனர். அதனால் அவர்களுக்கு உதவ முடிவு செய்தேன்'' என்றார் உபனிஷாந்த்.
மகனின் செயல் குறித்துப் பெருமிதம் கொள்ளும் தந்தை ரவிக்குமார், ''இப்போது வெளியே செல்ல முடியாது என்பதால் எங்களுக்கு எந்த வருமானமும் இல்லை. ஆனாலும் கடவுள் ஒருவழியைக் காட்டாமலா போய்விடுவார் என்று நம்பிக்கை இருக்கிறது'' என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT