Published : 03 Apr 2020 12:43 PM
Last Updated : 03 Apr 2020 12:43 PM
விதவிதமான கதைகள், வித்தியாசமான கலைப்பொருட்கள், விழிப்புணர்வு வீடியோக்கள், இடையே கொஞ்சம் விளையாட்டு என சுட்டிகளின் ஊரடங்கை ஆன்லைன் வழியே உற்சாகப்படுத்தி வருகிறார் ஆசிரியர் கோகிலா.
கல்லூரியில் பேராசிரியராக இருந்த இவர், உடலில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் தற்போது 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டிலேயே வெவ்வேறு நேரங்களில் ட்யூஷன் எடுத்து வருகிறார்.
கரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள சூழலில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் உட்பட அனைத்து மாணவர்களும் வீட்டிலேயே இருக்க வேண்டியுள்ளது.
இதற்கிடையில் ஆசிரியர் கோகிலா, தன்னுடைய ட்யூஷன் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வழியாகவே விதவிதமான செயல்முறைகளை கற்றுக் கொடுக்கிறார். அதைச் சிறப்பாகச் செய்யும் மாணவர்களை வெற்றியாளர்களாக அறிவிக்கிறார்.
இதுகுறித்து நம்மிடையே பேசுபவர், ''ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு விதமான தனித்திறமை இருக்கும். ட்யூஷன் வாயிலாக அதை அறிந்திருக்கிறேன். அதை ஊக்கப்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு தினந்தோறும் டாஸ்க் கொடுப்பேன்.
காகித முயல் உருவாக்கம், நாம் பயன்படுத்தும் துண்டில் கரடி, காகிதப் பைகள், மினியான்கள், காகிதங்கள் வழியாகக் கலைப் பொருட்கள், உள்ளங்கை மற்றும் விரல் ஓவியங்கள், காகிதப் பூக்கள் உருவாக்கம், ஓவியம் வரைதல், பேனா ஸ்டேண்ட் என ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களுக்குப் பிடிக்கும் பொருட்களைச் செய்ய வைக்கிறோம்.
காலை எழுந்ததும் 6 மணிக்கு மாணவர்கள் அனைவரும் உள்ள வாட்ஸ் அப் குழுவில் தினந்தோறும் இதை அனுப்பி விடுவேன். மாலை 3 மணியை செயல்முறைக்கான இறுதி நேரமாக அறிவிப்பேன். இதன் மூலம் நாள் முழுவதும் மாலை வரை மாணவர்கள் ஆர்வத்துடன் அவற்றைச் செய்கின்றனர்.
இதுகுறித்து எனக்கு போன் செய்து பேசும் பெற்றோர்கள் சிலர், 'இதனால் எங்களின் மகன்/ மகள் காலையில் சீக்கிரமாகவே எழுந்துவிடுகிறார். எங்களைச் சார்ந்தே இருக்காமல் கலைப் பொருட்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுகிறார்' என்று பாராட்டுகின்றனர். ' என் குழந்தைக்குள் இத்தனை திறமை ஒளிந்திருந்தது இப்போதுதான் எனக்குத் தெரிகிறது' என்றும் சொல்கின்றனர்.
அதுபோக முகக் கவசங்களை அணிவது, கை கழுவுவது எப்படி என்பது குறித்தும் வீடியோ அனுப்பினேன். அதை அவர்கள் முறையாகச் செய்து வீடியோ எடுத்து அனுப்பியுள்ளனர்.
இவை தவிர விழிப்புணர்வுக் கதைகளை எனது குரலிலேயே பேசிப் பதிவு செய்து, யூடியூபில் வீடியோவாகப் பதிவேற்றிவிடுவேன். அதையும் மாணவர்களுக்கு அனுப்புகிறேன். கரோனா குறித்து நானே பாடல் பாடி, வெளியிட்டுள்ளேன்.
தற்போது ட்யூஷன் தாண்டி ஆர்வமுள்ள மற்ற மாணவர்களையும் இதில் இணைத்திருக்கிறோம். இவை அனைத்தையும் எவ்விதப் பணமும் வசூலிக்காமல் இலவசமாகவே செய்கிறேன்.
இதன் மூலம் கிடைக்கும் ஆத்ம திருப்தியை வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது'' என்று புன்னகைக்கிறார் ஆசிரியர் கோகிலா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT