Published : 02 Apr 2020 01:51 PM
Last Updated : 02 Apr 2020 01:51 PM
கரோனா சூழலில் மாணவர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கக் கூடாது எனவும் அவர்களின் மனநலன் முக்கியம் என்றும் அனைத்து ஐஐடிகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸ் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன / தள்ளி வைக்கப்பட்டுள்ளன. நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் கல்லூரி மாணவர்களின் வேலைவாய்ப்புக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து இந்தியாவில் உள்ள அனைத்து (23) ஐஐடிகளின் இயக்குநர்களிடம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பேசினார். காணொலிக் கருத்தரங்கு மூலம் அவர் பேசும்போது, ''கரோனா சூழல் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மாணவர்களின் மனநலனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை ஆசிரியர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். மாணவர்களுக்காகத் தனி உதவி எண்களை அறிவிக்க வேண்டும்.
மாணவர்களின் வேலைவாய்ப்புக்காக கல்வி நிறுவனங்களில் பிரத்யேகப் பணிக்குழுவை ஏற்படுத்த வேண்டும். கடந்த ஆண்டுகளில் கிடைத்த வேலைவாய்ப்புகளை விட, இம்முறை குறையாமல் இருப்பதை அக்குழு உறுதிப்படுத்த வேண்டும். பல்வேறு வேலை நிறுவனங்களோடு இணைந்து இதை மேற்கொள்ள வேண்டும். இக்குழுவில் உளவியல் நிபுணர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்லாது மாணவர்களின் கோடைகால, குளிர்கால இன்டர்ன்ஷிப் பயிற்சிகள் பாதிக்காதவாறு கல்வியாண்டுத் திட்டமிடலைக் கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்'' என்று அமைச்சர் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT