Published : 01 Apr 2020 05:49 PM
Last Updated : 01 Apr 2020 05:49 PM
கே.சோபியா
வெளிநாடுகளில் எல்லாம் வீடியோ கான்ஃப்ரன்ஸ் வாயிலாகப் பாடம் நடத்துகிறார்கள். நம் நாட்டில் அப்படிச் செய்தால் என்ன என்று பெற்றோர்கள் குரல் கொடுத்து வரும் நேரத்தில், மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளியொன்று தங்கள் மாணவர்களுக்கு வாட்ஸ் - அப் வழியாக பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது.
பத்தாம் வகுப்பு மாணவர்கள் படிக்க வேண்டிய பகுதிகளை தினமும் அவர்களது ஆசிரியர்கள் வாட்ஸ் - அப் வாயிலாக மாணவர்களுக்குத் தெரிவிக்கிறார்கள்.
அந்த மாணவர்கள் பெற்றோரின் கண்காணிப்பில் அந்தப் பாடங்களைப் படிக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, மாதிரித் தேர்வு நடத்தப்படுகிறது. கேள்விகள் வாட்ஸ் - அப் வாயிலாக கேட்கப்பட, மாணவர்கள் அதற்கான பதில்களைக் கையால் எழுதி, போட்டோ எடுத்து ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆசிரியர்கள் அவற்றைத் திருத்தி திரும்ப அனுப்புகிறார்கள்.
இதுபற்றி மதுரை சிந்தாமணியில் உள்ள பாலையம்பட்டி டாக்டர் டி.முத்துசாமி உயர்நிலைப் பள்ளி செயலாளர் அசோகன் நம்மிடம் பேசுகையில், “கடந்த ஆண்டுதான் எங்களது பள்ளி உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு 26 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள நிலையில், கரோனா காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுவிட்டன.
இருந்தாலும் மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு சந்தேகங்களைக் கேட்கலாம் என்று அறிவித்திருந்தோம். மாணவர்கள் அதில் அதிக ஆர்வம் காட்டியதைத் தொடர்ந்து அவர்களுக்கென வாட்ஸ் - அப் குழு ஏற்படுத்தி, பாடமும், தேர்வும் நடத்தி வருகிறோம்.
இந்தக் குழுவின் செயல்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர், செயலாளர் ஆகியோரும் கண்காணிக்கிறோம். தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை நடத்தும் கல்வி எனும் யூடியூப் சேனலில் உள்ள பாடங்களையும், பிற யூடியூப் பாடங்களையும் மாணவர்களுக்கு அனுப்பவும் செய்கிறோம். எங்கள் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் எல்லாமே மிகவும் கஷ்டப்படும் குடும்பத்துப் பிள்ளைகள். அவர்கள் டியூஷன் சென்று படிக்க வாய்ப்பில்லை என்பதால், இதில் அதிக கவனம் செலுத்துகிறோம்” என்றார்.
இதேபோல மதுரையில் பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரியானது தங்களது மாணவர்களுக்கு வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் பாடம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT